இலங்கையில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் மூண்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற அதிகளவிலான பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்கள் கடந்தும் இது வரை ஒரு வழக்கிற்குத் தானும் தீர்வு காணப் படவில்லை. அதே சமயம் இந்த விசாரணைகளில் எவரும் ஒரு பதிலளிக்கும் கடப்பாடுடையவராகக் காணப்படும் நிலைமை ஏற்படப் போவதில்லையென்று மனித உரிமைக் குழுக்கள் சிலவும் வழக்கறிஞர்களும் அஞ்சுகின்றனர்.
17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலைகள் உட்பட இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான நம்பகரமான விசாரணையானது அரசாங்கத்தின் உறுதியான தீர்மானத்திற்கான பரீட்சையாகும். அத்துடன், இந்த விடயமானது ஐ.நா. மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் பிரசன்னத்தைத் தடுப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய வழக்குகளை முன்னெடுக்க வேண்டிய உறுதியான தீர்மானத்திற்கும் இந்த விவகாரம் சோதனைக்களமாக அமைந்திருப்பதாக அசோசியேற்றட் பிரஸ் (ஏ.பி.) செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 சம்பவங்களை விசாரணை செய்வதற்கான பொறுப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தப் 16 சம்பவங்களில் இதுவரை 4 சம்பவங்கள் தொடர்பாகவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இந்த விசாரணையைக் கண்காணித்த சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தாருஸ்மான் தெரிவித்துள்ளார்.
இதுவொரு திருப்திகரமான ஏற்பாடுகள் இல்லாத விசாரணைகளென்றும் அவை கணிசமான அளவுக்கு முன்னேற்றத்தைத் தரவில்லையென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, பாதுகாப்புப் படையினரின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் சாட்சிகளைக் கடுமையான தொனியில் நிந்திப்பதாக மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச புகழ் பெற்ற நிபுணர் குழு உறுப்பினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதுடன், பீதியான சூழ்நிலை மற்றும் சாட்சிகள் பாதுகாப்புத் தொடர்பான திட்டத்தில் வினைத்திறனின்மை என்பனவற்றால் சாட்சிகள் பலர் சாட்சியமளிக்கத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான இயக்கத்தின் 17 பணியாளர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல் தெரிவிக்கையில்; பலர் முன்வந்து சாட்சியமளிக்க அஞ்சுவதாகக் கூறியிருக்கிறார்.
இந்தப் 17 பேர் படுகொலை தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தது. அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது குற்றச் சாட்டுத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையில் முதலாவது சாட்சி வியாழக்கிழமை (நேற்று) சாட்சியமளிக்கவிருந்தார். அவர் பாதுகாப்புப் பீதியால் சாட்சியமளிக்க வர முடியாதென ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தனது மைத்துனரின் கொலை தொடர்பாகத் தனது குடும்பத்திற்கு எவ்வாறு அறியவந்தது என்பது பற்றி மற்றொரு சாட்சி கிட்டத்தட்ட சர்ச்சையில்லாத முறையில் சாட்சியமளித்தார். ஆனால், தனது பெயரையோ புகைப்படத்தையோ பத்திரிகையாளர்கள் பிரசுரிக்கக் கூடாதென்ற நிபந்தனையின் பேரிலேயே இவற்றைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சாட்சிகளின் அச்சத்தைப் போக்கும் பாதுகாப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்குரிய பணிகளில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண கூறியுள்ளார்.
`அரசே இந்த ஆணைக்குழுவை நியமித்தது. ஆதலால் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வெற்றி பெறுவதைப் பார்க்க வேண்டும் என்பதே அரசின் ஆர்வமாகும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2006 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருந்தார். அத்துடன், இந்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற நிபுணர்கள் 11 பேரை உள்ளடக்கிய சுயாதீனக் குழுவையும் ஜனாதிபதி நியமித்திருந்தார். ஆனால், எந்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணையிலும் கடந்த 1 1/2 வருடங்களாக அதிகளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த மாத முற்பகுதியில் சர்வதேச புகழ் வாய்ந்த சுயாதீன நிபுணர் குழு விரக்தியால் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு அரசிடம் குறைவாக உள்ளதாகவும் விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைவானதாக இல்லையெனவும் அக்குழு குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது.
முக்கியமான சாட்சிகள் மத்தியில் காணப் படும் தயக்கத்தை அனுகூலமாகப் பாதுகாப்புப் படையினர் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் பிரயோசனமற்ற சாட்சிகளை ஆஜராக்கி நேரத்தை வீணடிப்பதாகவும் படுகொலையுண்ட நிவாரணப் பணியாளர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரட்ணவேல் கூறியுள்ளதுடன், இது விசாரணையின் முன்னேற்றத்தைத் தடுத்து விடுமெனவும் எவருமே பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக வரும் நிலைமையை இல்லாமல் செய்து விடக் கூடுமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன், அரசாங்கத்தினால் மூடி மறைப்பதற்காக திசை திருப்பப்படும் தந்திரோபாயங்களே இவையென்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் விசாரணைக்கான உள் சார் கட்டமைப்பை ஏற்படுத்த காலம் எடுத்ததாகவும் ஆனால், ஏற்பட்டிருக்கும் தாமதங்களால் நம்பகத் தன்மைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தான் நம்பவில்லையென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலகம கூறியுள்ளார்.
`காலம் எடுக்கும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளங்கிக் கொண்டோர் இந்த மாதிரியான கருத்தை தெரிவிக்க மாட்டார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.
கடுமையான உழைப்பு, அரசின் முழுமையான ஆதரவு என்பனவற்றுடன் விசாரணையை சர்வதேச தரத்திற்குக் கொண்டு வந்து நம்பிக்கையானதொரு முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென்று தெரிவித்துள்ள சர்வதேச புகழ்பெற்ற நிபுணர் குழுவின் உறுப்பினரான தாருஸ்மான், ஆனால், எங்களைப் பொறுத்தவரை இதுவரை அந்த இலக்கிற்குக் குறைவான தன்மையே காணப்படுகிறது என்று ம் கூறியுள்ளார்.