நிதிமுறைகேடு தொடர்பான வழக்கில் இந்திய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட்டில் செல்வாக்கு மிகுந்தவராக டால்மியா இருந்தார். கிரிக்கெட் தலைவராக சரத் பவார் தேர்வு செய்யப்பட்ட பின் நிலைமை தலைகீழாக மாறியது. டால்மியா மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன. 1996 இல் நடந்த உலகக் கிண்ணப் போட்டி நிதியில் ஊழல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது பற்றி மும்பை பொலிஸின் பொருளாதார குற்றங்களுக்கான பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில் கிரிக்கெட் நிதியை தனது தொலைபேசி கட்டணம், ஹோட்டல் கட்டணம், கார் வாடகை உள்ளிட்ட சொந்தச் செலவுக்காக டால்மியா பயன்படுத்தியது தெரிய வந்தது. 2.9 கோடி ரூபா அளவுக்கு நிதி முறைகேடு செய்ததாக கண்டறியப்பட்டது.