சென்னையில் நேற்று ஆரம்பமான தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் புதிய சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் ராசியானதாகும். இங்கு 7 டெஸ்டில் ஆடியுள்ள அவர் 4 சதத்துடன் 736 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 92 ஆகும்.
ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்து உலக சாதனை படைத்துள்ள 34 வயதான டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற இன்னும் 172 ஓட்டங்கள் தான் தேவை.
146 டெஸ்டில் விளையாடி 11,782 ஓட்டங்கள் குவித்துள்ள டெண்டுல்கர், டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள லாராவின் சாதனையை (11,953 ஓட்டம்) தகர்ப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
அவுஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடிய அவர் நல்ல போர்மில் இருக்கிறார். இதனால் அவர் சாதனை படைப்பார் என்பதில் அதிக நம்பிக்கை நிலவுகிறது. அதோடு, டெண்டுல்கருக்கு உள்ளூரில் டெஸ்டில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஏற் படுத்த மேலும் 12 ஓட்டங்கள் எடுத்தால் போதுமானதாகும். முன்னாள் கப்டன் கவாஸ்கர் இந்திய மண்ணில் 5067 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை அதிகமாக உள்ளது.
இதேவேளை, இந்திய அணியின் முன்னாள் கப்டன் ராகுல் டிராவிட் 10 ஆயிரம் ஓட்டங்களை நெருங்கியுள்ளார். 119 டெஸ்டில் ஆடி 9,920 ஓட்டங்கள் எடுத்துள்ள ராவிட் இன்னும் 80 ஓட்டம் எடுத்தால், டெஸ்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 6 ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையையும், 3 ஆவது இந்திய வீரர் என்ற புகழையும் பெறுவார். அவர் சென்னை டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டுவார் என்று நம்பப்படுகிறது.
35 வயதாகும் ராவிட், இதுவரை 119 போட்டிகளில் விளையாடி 9920 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் 24 சதங்களும், 51 அரைச் சதங்களும் அடங்கும். ஓர் இனிங்ஸில் அதிகமாக 270 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைத்து அரிய சாதனையை டெண்டுல்கரும் டிராவிட்டும் படைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.