- டாக்டர் எம்.கே. முருகானந்தன்-
தடுப்பூசி இருந்தால் எவ்வளவு நல்லது. பயப்பட வேண்டியது இல்லைதானே! பலரின் அங்கலாய்ப்பு இது. முக்கியமாக அங்கும், இங்கும் எங்குமாக பாலுறவுக்கு ஆள் தேடுபவர்களின் நப்பாசைக் குரல் தான் இது. எந்த நோயைப் பற்றிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா?
எயிட்ஸ் நோய்க்குத்தான்! ஆம் மக்களை மிகவும் பீதி கொள்ள வைக்கும் நோயாக எயிட்ஸ் இருக்கிறது. ஏன்? விரைவாகத் தொற்றுவதால் கொள்ளை நோய் எனவும், குணப்படுத்த முடியாதது என்பதால் மிக ஆபத்தான நோய் எனவும் பலரையும் கலங்க வைக்கிறது. பாலியல் தொடர்புகளில் கட்டுப்பாடாக இருப்பவர்கள் தப்பிவிடுவார்கள். சபல புத்தியுள்ளவர்கள் பாடு திண்டாட்டம் தான். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நிலையோ மிகவும் பரிதாபம். பணமிருந்தால் இன்று மருந்துகள் மூலம் நோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மையே.
"இரண்டு வருடங்களுக்குள் தடுப்பூசி தயாராகிவிடும்"என்றார்கள் 1984 ஆம் ஆண்டில். அதாவது, எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை முதலில் கண்டுபிடித்தவுடன். 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. உலகெங்கும் 32 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், ஒவ்வொரு நிமிடமும் 4 பேர் இந்நோயால் மரணிக்கிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி பற்றி நம்பிக்கைக் கீற்று தென்படுகிறதா என்றால் இல்லை என்று தான் இன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அண்மையில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அது மனிதர்களில் கள ஆய்வுக்கும் விடப்பட்டது. ஆனால், அதன் முடிவுகள் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அனைவரையுமே அதிர்ச்சித் திகிலில் ஆழ்த்திவிட்டது. காரணம் என்னவென்றால் தடுப்பூசி போட்டவர்களுக்கு தடுப்பூசி போடாதவர்களை விட அதிகமாக எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது.
காரணம் என்ன? தடுப்பூசி தரம் கெட்டதா, அல்லது அதன் வீரியம் போதாதா, அல்லது தடுப்பூசியினுள் எயிட்ஸ் கிருமி தவறுதலாக இருந்ததா? எதுவுமே இல்லை! இத் தடுப்பூசியானது மனித உடலில் ரி செல் கலங்களின் செறிவை அதிகரிக்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டது. ரி. செல் என்பது எமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் ஒரு அங்கமாகும். இது எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களைக் கண்டறிந்து அழிக்க வல்லது. எனவே, இதன் உற்பத்தியை அதிகரித்தால் ஒருவரது உடலில் எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களை அழித்து நோய் ஏற்படாமல் தடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவ்வாறு தான் இவ்வளவு காலமும் நம்பப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மாறாக ரி செல் அதிகரித்த போது கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.
எனவே, தடுப்பூசி தயாரிப்பு என்பது மீண்டும் ஆரம்ப கட்டத்திற்கே போய்விட்டது. ஏனெனில், இந்தத் தடுப்பூசி மட்டுமின்றி இதுவரை தயாரிப்பு நிலையில் இருந்த தடுப்பூசிகள் யாவுமே இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே (அதாவது ரி செல் அதிகரித்தால் நோய் தொற்றாது) தயாரிக்கப்பட்டன. ஆனால், கள ஆய்வு முடிவு எதிர்மாறாக அமைந்து விட்டது. இதனால், இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தயாரிப்பில் இருந்த அனைத்துத் தடுப்பூசி ஆய்வுகளையும் தயாரிப்புகளையும் கிடப்பில் போட வேண்டியதாயிற்று. ஆம் தடுப்பூசிக்குள் அகப்படமாட்டேன் என முரண்டு பிடிக்கிறது. எயிட்ஸ் வைரஸ்.
இந்தக் கள ஆய்வின் போது தடுப்பூசி போட்டும் நோய்க் கிருமி தொற்றிய அனைவருமே ஆண்கள் என்பது இன்னுமொரு முக்கியமான விடயமாகும். பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளர்கள் ஆன போதும் அவர்கள் எவருக்குமே எயிட்ஸ் கிருமி தொற்றவில்லை என்பதும் மிக முக்கியமாக அவதானிக்கபட வேண்டியதாகும். இது எதனைக் குறிக்கிறது? பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆணுறை அணியாமல் உறவு வைக்க அனுமதிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு தொற்றவில்லை. ஆனால், தடுப்பூசி போட்ட ஆண்கள் கவலையீனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது, உறவின் போது பாதுகாப்பாக இருக்க வில்லை. அதனால் தான் தொற்றியது எனலாம். இது அனுமானம் மாத்திரமே. நிச்சயமான ஆய்வு முடிவல்ல.
இவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன? தடுப்பூசி வரலாம், வராமல் விடலாம். அல்லது அது வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. உடலுறவின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, திருமண உறவுக்கு வெளியே பாலியல் தொடர்பு வைக்க வேண்டாம். அப்படி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆண் பங்காளியானவர் ஆணுறை அணிய வேண்டியது மிகமிக அவசியம்.