-எம்.பி.எம். பைறூஸ்-
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை யாரும் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. காலை எழுந்தவுடன் கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைச் செலவினம் ஒன்றே நாட்டின் பொருளாதார நிலை குறித்து அறிந்துகொள்ளப்போதுமானது.
போர்நிறுத்த உடன்படிக்கையின் முடிவு, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால யோசனை, 13ஆவது திருத்தச் சட்டமூலம், வடக்குக்கு இடைக்கால அதிகாரசபை, கிழக்குக்கு மாகாணசபைத் தேர்தல், அரசியலமைப்புச்சபை என தேசிய ஊடகங்களில் பல்வேறு விடயங்கள் ஊடாகப் பேசப்படுகின்றபோதிலும், மக்களின் சிந்தனையோ அன்றாட வாழ்க்கைச் செலவை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றியதாகவே இருக்கிறது.
கடந்த இரு வருட காலங்களில் 18 தடவைகளுக்கும் மேல் அதிகரித்துள்ள பெற்றோலிய விலைகள், அரிசி, சீனி, பால்மா, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையுயர்வு, போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு, மார்ச் மாதம் முதல் 40 வீத அதிகரிப்பைக் காணவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள மின்சாரக் கட்டணம் என வாழ்க்கைச் செலவினங்கள் மக்களை மூச்சுத்திணற வைக்கின்றன.
நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது? என்பது அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இருந்தது. இந்தக் கேள்வி அச்சிடப்பட்ட சுவரொட்டிகளைக் கூட தலைநகரெங்கும் அப்பத்திரிகை ஒட்டியிருந்தது. அதற்குக் காரணம், இந்தக் கேள்வி சாதாரண மக்களின் மனதில் அன்றாடம் எழுப்பப்படும் ஒரு கேள்வியாகவிருப்பதாகக் கூட இருக்கலாம்.
பொருளாதார நெருக்கடி என்பது இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவும் சமகாலத்தில் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினை என்பது ஊடகங்களுடன் தொடர்பாயிருக்கின்ற ஒருவரால் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடிய உண்மை. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சடுதியாக அதிகரித் திருப்பதே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிடையவதும் இதற்கு மற்றொரு காரணம்.
இந்நிலையில், நமது நாடும் பொருளாதார நெருக்கடியையும், தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் எதிர் கொண் டிருப்பதற்கு உலக சந்தையில் ஏற் பட்டிருக்கும் எண்ணை விலை அதி கரிப்பு ஒரு காரணம் என்று சொல் லப்பட்டபோதிலும், வரலாற்றில் என்றுமில்லாதவாறு அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்ற யுத்தமும், அதற்காக அரசாங்கம் செலவு செய்கின்ற பெருந்தொகைப் பணமும் இதற்குப் பிரதான காரணம் என்ற வாதத்தையும் நிராகரிக்க முடியாது.
போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வருவதற்கு முன்னரே மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த புலிகளுக்கெதிரான பிரகடனப் படுத்தப்படாத போரானது கடந்த ஜனவரி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட போராக மாறி வடக்கில் விமானக்குண்டு வீச்சுக்களாகவும் தெற்கில் பொதுமக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களாகவும் வியாபித்து நிற்கிறது.
கிழக்கு விடுவிப்பின் மூலம் அரசாங்கமும் படையினரும் பெற்றுக்கொண்ட உற்சாகமானது வடக்கிலும் போரினைத் தீவிரமாக முன்னெடுப்பதற்கு ஊக்கமருந்தினை அளித்திருக்கிறது. அடுத்த தளபதிக்கும் போரை விட்டுவைக்காது இந்த வருட இறுதிக்குள்ளேயே எஞ்சியிருக்கும் சொற்ப புலிகள் இயக்கத்தினரையும் அழித்துவிடுவேன் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறுதியாகச் சொல்கிறார். எனினும், சில மாதங்களிலேயே இந்தப் போரில் வெற்றியீட்டி விடுவோம் என்ற அவரதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் முன்னைய காலக்கெடு இப்போது மெதுவாக நீடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒன்று அல்லது ஒன்றரை வருடங்கள் பிடிக்கலாம் என்று ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறிய கதை மீண்டும் இலங்கையில் ஆரம்பித்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்திருக்கும் யுத்தத்திற்காக 2006ஆம் ஆண்டைய வரவு செலவுத்திட்டம் முதல் இன்று வரை ஒதுக்கி வருகின்ற நிதியானது இலங்கை போன்ற வளர்ந்துவரும் சிறிய நாடு ஒன்றின் பொருளாதாரப் பலத்திற்கு அப்பாற்பட்டது என்பதும், யுத்தத்திற்கான பெருந்தொகை நிதி ஒதுக்கீடே பொருளாதார நெருக்கடிக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கும் காரணம் என்பதும் அண்மைக்காலமாக மேலெழுந்து வரும் வாதங்களாக இருக்கின்றன.
இந்த வாதங்களில், முன்னாள் விமானப் படை எயார் மார்ஷல் ஹரி குணதிலக அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முக்கியமானவை.
2006ஆம் ஆண்டு பாதுகாப்புச் செலவினங்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 69.5 பில்லியன் ரூபாய்களாகும். அத்தொகை 2007 நவம்பரில் 139.7 பில்லியன் ரூபாவும் 2008இல் 166 பில்லியன் ரூபாவும் பெரும் அதிகரிப்பைக் கண்டிருக்கிறது. இதன்படி ஒருநாளைக்குரிய பாதுகாப்புச் செலவினம் மாத்திரம் 456.4 மில்லியன் ரூபாய்களாகும். சிலவேளை 2008இன் இறுதியில் அடுத்த ஆண்டுக்கான தொகை 200 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பைக் காணலாம். அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் ஒரு நாளைக்குரிய பாதுகாப்புச் செலவினம் மாத்திரம் 550 மில்லியன் ரூபாய்களாக அதிகரிக்கும் என்கிறார் ஹரி குணத்திலக.
1983இல் பாதுகாப்புச் செலவினங் களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய பாதுகாப்புச் செலவினம் 110 மடங்குகளால் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அக் காலப்பகுதியில் ஒருநாளைக்குரிய பாதுகாப்புச் செலவினம் 4.79 மில்லியன் ரூபாய்களாகவே இருந்ததாகவும், ஆனால் இந்த 24 வருடங்களில் அத்தொகை 110 மடங்குகளால் அதி கரிப்பைக் கண்டிருப்பதென்பது வளர்ந்துவரும் மிகச் சிறிய நாடான இலங்கையினால் தாங்கிக் கொள்ளக்கூடிய பொருளாதாரச் சுமையல்ல என்றும் அவர் எச்சரிக்கிறார்.
யுத்தத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் பயன்படுத்திய இந்தப் பாரிய தொகையினை வீடமைப்புத் தொகுதியொன்றை நிறுவுவதற்குப் பயன்படுத்தியிருந்தால் 2006இல் 109,500 வீடுகளையும், 2007இல் 146,000 வீடுகளையும், 2008இன் இறுதியில் 200,750 வீடுகளையும் நிர்மாணித்து மொத்தமாக மூன்றே ஆண்டுகளில், 456,250 வீடுகளைக் கட்டி முடித்திருக்க முடியும் என்று ஹரி குணதிலக வாதிடுகிறார். இதே தொகையினை வேறொரு வகையில் பயன்படுத்தியிருந்தால், மஹாவலி திட்டத்தைப் போன்ற 9 திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும் என்றும் ஹரி குணதிலக தெரிவித் திருக்கிறார்.
இதே போன்றதொரு கருத்தினையே அண்மையில் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் வெளியிட்டிருந்தார். ஒரு நாளைக்கு மாத்திரம் அரசாங்கம் யுத்தத்திற்காக 583 மில்லியன் ரூபாய்களைச் செலவிடுவதாகவும், இதன்படி ஒரு மணித்தியாலத்திற்கான செலவு 25 மில்லியன் ரூபாய்களாகவும், ஒரு நிமிடத் திற்கு அது 420,000 ரூபாய்களாகவும் இருப்பதாக ரவி கருணாநாயக்க வேறொரு கணக்கைக் காட்டியிருந்தார். யுத்தத்திற்கான இந்தச் செலவினங்கள் முதலீடுகள் அல்ல என்றும், இவ்வாறான பெருந் தொகைப் பணம் ஒருபோதும் திரும்பிக் கிடைக்கப்போவதில்லை என்றும் ரவிகருணாநாயக்க சுட்டிக் காட்டியிருந்தார்.
இவை அரசாங்கத்தின் யுத்தத்திற்கான அதீத செலவினம் குறித்து மிக அண்மைக் காலத்தில் சுட்டிக் காட்டப் பட்ட முக்கிய கருத்துக்கள். வரலாற்றில் என்று மில்லாதவாறான போர்ச்செலவு இப்படி அதிகரித் திருக்கும்போது பொருளாதாரச் சுமையும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும். உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை அதிகரிப்பை இதற்கு ஒரு காரண மாகச் சொல்வது நொண்டிச் சாட்டன்றி வேறெதுவாக இருக்க முடியும்? இந்த செலவினங்கள் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருப்பதோடு நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் தடையாக இருக்கின்றன என்பதை வலியுறுத்துவதாகவே மேற்படி கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
போர்நிறுத்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து இலங்கைக் கான உதவிகளை நிறுத்தப்போவதாக சில நாடுகள் எச்சரித்துள்ள நிலையிலும் பல நாடுகள் ஏற்கனவே வழங்கிவந்த உதவிகளை நிறுத்தியுள்ள நிலையிலும் அரசாங்கத்தின் இந்தத் தீவிர யுத்த முன்னெடுப்பும் அதற்கான பெருந்தொகைச் செலவினமும் வருங்காலங்களில் மேலும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும்.
ஆனால், மறுபுறத்தில் அரசாங்கத் தரப்பினரோ வாழ்க்கைச் செலவு உயர் வுக்கு யுத்தம் ஒரு காரணம் அல்ல என வாதிடுகின்றனர். நாட்டின் அறுபதாவது சுதந்திரதின நிகழ் வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உலக உணவுப் பற்றாக்குறை, எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையினாலேயே உலக மக்களைப் போன்று இலங்கை மக்களும் கஷ்டப்படுகிறார்கள் என்றும், நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமைக்கு யுத்த செலவினங்கள் ஒரு காரணமேயல்ல என்றும் சொல்லியிருந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவோ ஒருபடி மேலே போய், நாட்டில் அடுத்த 18 மாதங்களுக்கு யுத்தத்தைத் தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கான பொருளாதாரம் தம்மிடம் இருப்பதாகவும், வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை இலங்கைக்கு மட்டுமுரியதல்ல எனவும் ஊடக மொன்றுக்குக் கருத்துத் தெரிவித் திருக்கிறார்.
அமெரிக்காவில் கூட இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப் பதாகவும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பதே உலகெங்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்குக் காரணம் எனவும் எண்ணெய் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் சுமையுடன் ஒப்பிடுகையில் யுத்த செலவினங்களால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சுமை மிக மிகக் குறைவானதே என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொருபுறம, யுத்தத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் ஜே.வி.பி. யினர் யுத்த செலவினங்களாலன்றி உலகின் மிகப்பெரிய அமைச்சரவைக்கான செலவினங்களே நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்குக் காரணம் என வாதிடுகின்றனர்.
நாட்டின் யுத்த சூழ்நிலையை நியாயப் படுத்தி தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற் கொண்டுவரும் தேசப் பற்றுள்ள தேசிய இயக் கம் அண்மையில் பத்திரிகை யில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில், வெள்ளையரின் யுத்தத்திற்காக பஜ்ரியைச் (சுவையற்ற ஒரு தானியம்) சாப்பட்ட உங்களால் ஏன் நமது சொந்த யுத்தத்திற்கான பொருளாதாரச் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது எனும் கேள்வியையும் எழுப்பியிருந்தது. மக்கள் பொருளாதார நெருக்கடியினால் அல்லல் படுகின்ற நிலையில், வாழ்க்கைச் சுமையினைத் தாங்கிக்கொள்வதானது நாட்டுக்காகச் செய்கின்ற தியாகம் என மூளைச்சலவை செய்வதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் வேலைத்திட்டமாக இருக்கிறது.
இவ்வாறு யுத்தத்திற்கு ஆதரவானவர்கள் அதற்கான செலவினத்தை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாது உலக சந்தையின் எண்ணெய் விலை மீது இலகுவில் பழியைப்போட்டுவிடுகின்றமையானது பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப்போவதில்லை.
ரவிகருணாநாயக்க சுட்டிக்காட்டுவதைப் போன்று இந்தப் பெருந் தொகைச் செலவினம் ஒரு போதும் திரும்பக் கிடைக்கப் போவ தில்லை. இவை இலாபமீட்டித் தரும் முதலீடுகளுமல்ல. வெறும் அழிவுகளைக் கொண்டுவருவதற்கான முதலீடு களாகவே இந்த பில்லியன் கணக்கான ரூபாய்கள் இருக்கப்போகின்றன.
ஒரு சாதாரண வியாபாரி கூட சில ஆயிரங்களை முதலிட்டு ஒரு வியாபார முயற்சியைத் தொடங்க முன்னரே அதன் இலாப நட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பல தடவைகள் யோசிப்பார். இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் மாத்திரம் எந்தவொரு இலாபத்தையம் கொண்டுவராது வெறும் அழிவுகளை மட்டுமே ஈட்டித்தந்து கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்திற்காக இவ்வளவு பெரும் தொகைப் பணத்தினைச் செலவு செய்வதை எந்தவகையில் நியாயப்படுத்த முடியும்?
அதுவும் மக்களுக்கு வாழ்க்கைச் சுமையை ஏற்றும் இந்த யுத்தம் மக்களின் பெயராலேயே நடாத்தப்படுவதுதான் இங்குள்ள வேடிக்கை.
ஐ.என்.எல்.லங்கா