மலையகம் சென்று திரும்பிய நண்பர் இரண்டு சுவாரஷ்யமான காட்சிகளை விபரித்தார்.
இவர் ஒரு தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருந்தபோது, பஜேரோ வாகனத்தில் ஒரு இளம் ஜோடி வந்திறங்கியது. அந்த நவநாகரிக மங்கை தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஒரு பெண் தொழிலாளியிடமிருந்து கூடையை வாங்கித் தனது தலைமீது வைத்துக்கொண்டார். இதனை அந்த ஆடவன் தனது கமராவினால் படம் பிடித்துக் கொண்டார்.
பின்னர் அந்த மங்கை கூடையை இறக்கி ஒப்படைத்துவிட்டு ஒரு 500 ரூபா தாளை எடுத்து அந்த பெண் தொழிலாளியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இன்னொரு காட்சி இது. நுவரெலியாவுக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவுக்கு ஓர் இளம் ஜோடி ஆடம்பரக் காரொன்றில் வந்திறங்கியது. அந்த இளமங்கை, காரிலிருந்து இறங்கியதும், மாங்காயை துண்டு துண்டாக வெட்டி உப்புப் போட்டு விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சென்றார். மாங்காய் துண்டுகளை வாங்கி கடித்துச் சுவைத்துக் கொண்டே வந்தார். அவரின் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி. இதனை அங்கு நின்ற சிலர் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பெரிய இடத்துப் பெண்களுக்குச் சின்னச் சின்ன ஆசைகள் வருவதுண்டு!