Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
யதார்த்தத்தை அம்பலமாக்கியிருக்கும் ஜயம்பதி விக்கிரமரட்ணவின் ராஜிநாமா
[03 - March - 2008] [Font Size - A - A - A]
இன நெருக்கடிக்கு அரசியல்தீர்வு காணும் நடவடிக்கைகளில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒருபோதும் இதயசுத்தியுடனான முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை என்ற பெரும்பாலான தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கு வலுசேர்க்கும் விதத்திலேயே தற்போதைய அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அமர்வுகளும் அறிவிப்புகளும் தொலைக்காட்சி நாடகத்தொடர் போன்று நீடித்துக் கொண்டு செல்கின்ற நிலையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பிந்திய அறிவிப்பாக, இன்னும் மூன்று மாதங்களில் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை வெளிவந்து விடும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் 90 சதவீதமானவை பூர்த்தியடைந்து விட்டதாகவும் எஞ்சியிருப்பவை தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக வாராந்தம் குழுவின் சந்திப்புகள் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்திருப்பதுடன், ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையிலான சமீபத்தைய சந்திப்பானது எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், புதிய அதிகாரப் பகிர்வு முறைமையை ஏற்படுத்துவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கையின் அரசியலமைப்பு விவகார ஆலோசகரான ஜயம்பதி விக்கிரமரட்ணவின் இராஜிநாமாவும் அவர் தனது பதவி விலகலுக்கு தெரிவித்திருக்கும் காரணமும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இதுகால வரையிலான முயற்சிகளின் பெறுபேறுகள் குறித்து பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதுடன், எதிர்பார்ப்புகளையும் மழுங்கடிப்பதாகக் காணப்படுகின்றது.

இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தவராக இருக்கும் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தோன்றவில்லை என்றும் ஆதலால் அரசாங்கத்தின் ஆலோசகராகத் தான் இருக்க வேண்டிய தேவை இல்லையென்றும் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் போவதில்லையென அரசாங்கம் முடிவுசெய்த பின் தான் அங்கிருந்து கொண்டு பிரயோசனமான விதத்தில் எதனையும் செய்ய முடியாது என்று கருதியதையடுத்தே இராஜிநாமா செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கும அவர், தான் சார்ந்த லங்கா சமசமாஜக் கட்சியானது அதிகளவிலான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான நிலைப்பாடுடையதென்றும் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்ட கட்சியென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது சட்டமாக இருக்கும் 13 ஆவது திருத்தமானது இனநெருக்கடிக்கு தீர்வாக அமையுமென லங்கா சமசமாஜக் கட்சி கருதவில்லை என்றும் குறைந்தது மிதவாதப் போக்குடைய தமிழர்களாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கே தாங்கள் ஆதரவெனவும் 13 ஆவது திருத்தத்தை மிதவாதப் போக்குடைய தமிழர்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை மிகத் தெளிவான முறையில் நாடிபிடித்துப் பார்த்திருக்கும் தன்மையை இந்த அரசியலமைப்பு நிபுணர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

13 ஆவது திருத்தத்தையே முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம், அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த 13 ஆவது திருத்தத்தை மாத்திரம் அமுல்படுத்துவதென்றால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தேவை இல்லையே என்பது அவர் முன்வைத்திருக்கும் வாதமாகும்.

13 ஆவது திருத்தம் ஏற்கனவே நாட்டின் சட்டத்தின் ஓரங்கமாக உள்ளது. அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அரசியல் ரீதியான விருப்பம் இருந்தால் மாத்திரம் போதும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஆதரவளிக்க முன்வந்துள்ள போதும் அது நடைமுறைக்கு வருவது குறித்து நிச்சயமற்ற நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. ஏனெனில், இந்தவிடயம் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவை உபகுழுவிடம் இந்த விவகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவிலுள்ள அமைச்சர்கள் அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் அச்சமாகக் காணப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு அதிககாலம் எடுக்குமெனவும் அவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தாலும் அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் அமைந்திருக்குமா என்பதிலும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அப்பால் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தொடர்ந்து புதியதொரு கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையிலான அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பணியில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி அனுமதியளித்திருக்கின்றார்.

எது எவ்வாறாயினும் யுத்த நடவடிக்கைகளில் காட்டப்படும் முனைப்புகளால் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்படாது அமுங்கிப்போய்விடும் தன்மையையே கள நிலைவரங்கள் சுட்டி நிற்கின்றன.

வட, கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கக் கூடிய விதத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தமது இதய சுத்தியுடனான விருப்பத்தை வெளிப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே எதிர்காலம் நம்பிக்கை தருவதாக அமையும். ஆனால், இதற்கான விடை சிந்தனைக்கு எட்டாத வெகு தொலை தூரத்திலேயே என்பது நிச்சயம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com