ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் ஈராக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
1980 களில் இரு நாடுகளுக்குமிடையிலும் இடம்பெற்ற யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் பலியான பின்னர் ஈரானிய ஜனாதிபதியொருவர் ஈராக்கிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
அஹமதி நிஜாத்தின் இவ் இரு நாள் விஜயம் ஸியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஈராக்கிய அரசுக்கு தனது பலமான ஆதரவை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரது விஜயத்தை முன்னிட்டு பாக்தாத் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விஜயத்தின் போது அஹமதி நிஜாத் ஈராக் ஜனாதிபதி ஜலால் தலபானி மற்றும் பிரதமர் நூரி-அல் மாலிகி ஆகியோரையும் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் விஜயமானது ஈராக்கிற்கும் ஈரானுக்குமிடையில் பலமான உறவைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கான அடையாளமாக பலராலும் நோக்கப்படும் அதேவேளை, இதனை ஈரானின் நீண்ட கால எதிரியான அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், அணுவாயுத விவகாரம் தொடர்பிலும் ஈராக்கிலுள்ள போராளிகளுக்கு உதவி வழங்குவதாகவும் ஈரான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அமெரிக்கா 150,000 இற்கும் அதிகமான தனது படைகளை ஈராக்கில் வைத்துள்ள போதிலும் இவ் விஜயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தனது படைகளை ஈடுபடுத்தாதன் மூலம் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தனது விஜயத்திற்கு முன்பாக கருத்துத் தெரிவித்த அஹமதி நிஜாத் தனது விஜயத்தின் மூலம் ஈராக்கின் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுமெனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.