இந்தியாவின் கடலடி ஏவுகணைப் பரிசோதனையால் இப்பகுதியில் ஆயுதப் போட்டி அதிகரிக்குமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினம் அருகே கடலுக்கு அடியில் இருந்து கே 15 என்ற ஏவுகணையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக செலுத்தி இந்தியா சோதனை செய்தது.
இது பற்றி பாகிஸ்தான் கப்பல் படைத் தளபதி தாஹிர், கராச்சியில் நிருபர்களிடம் தெரிவிக்கையில்;
"இந்தியாவின் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.இப்போது கடலுக்கு அடியில் இருந்து ஏவுகணையை செலுத்தி இந்தியா சோதனை செய்திருப்பதால் இந்த பகுதியில் ஆயுதப் போட்டி அதிகரிக்கும். இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தானும் அது போன்ற ஏவுகணையை உருவாக்க வேண்டியிருக்கும் என்றார்" அவர்.
கடலுக்கு அடியில் இருந்து ஏவுகணையை செலுத்தும் திறன் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருந்தது.தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
இந்த ஏவுகணையில் அணு ஆயுதத்தைப் பொருத்தி எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்தியா செலுத்திய ஏவுகணையானது 700 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்கக் கூடியது.