ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.
இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையில் வடக்கு- கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போதல், கைதுகள், தடுத்துவைப்புகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் குறித்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் கடுமையான அறிக்கைகளையும் கண்டன அறிக்கைகளையும் வெளியிடவுள்ளன.
இலங்கையில் நிலைமைகள் மிக மோசமடைந்து வருவது தொடர்பாக சித்திரவதைகள் மற்றும் ஆட்கள் காணாமல்போதல் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மல்பிரட் நொவாக் நீண்ட விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கெதிராக பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேசக் கூட்டணிகளால் கடும் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிறவுண் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு அலுவலகமொன்றை அமைக்க வேண்டுமென்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் சிபாரிசை ஆதரிக்கும் வகையிலும் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் நாடுகளும் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் மலோக் பிறவுண் கூறியுள்ளார்.
இதேநேரம், இந்தக் கூட்டத்தொடருக்காக இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் சட்ட மா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளும் நேற்று ஜெனீவா சென்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடரில் இவர்கள் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்குமென வும் தெரிவிக்கப்படுகிறது.