* சீனச்சார்பு கம்பனியின் கேள்விமனு நிராகரிப்பு
கொழும்புத் துறைமுகத்தில் புதிய கொள்கலன் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கான கேள்வி மனுக் கோரலில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விடயம் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.
ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட கம்பனியான ஹட்கிசன் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென இலங்கையின் ஊடகத்தில் சிறிய அளவிலான பிரசாரத்தை குறிப்பிட்ட ஒரு சாரார் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரசாரம் வெற்றி கண்டிருப்பதன் அடையாளமாக இலங்கை அரசாங்கம் முன்னர் கோரியிருந்த கேள்வி மனுக் கோரலை இரத்துச் செய்து விட்டு இப்போது `தேசிய நலன்கருதி'யென புதிய கேள்வி மனுக்கோரலை விடுத்திருக்கிறது.
`தேசிய நலன்' சார்ந்ததென கருதப்படும் விடயங்கள் இரண்டு விதமான நோக்கங்களைக் கொண்டதாக இருக்கக் கூடுமென அவதானிகள் கூறுகின்றனர். இலங்கைக் கம்பனிக்கு (அய்ற்கென் ஸ்பென்ஸ்) இந்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டிய தேவை இந்த நோக்கங்களில் ஒன்றாக இருக்கக் கூடுமெனவும் மற்றையது இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை மனதில் கொண்டதாக அமைந்திருக்கலாமெனவும் அவர்கள் கருதுகின்றனர். இலங்கையின் ஒரேயொரு அயல்நாடாகவும் பிராந்தியத்தில் பலம் பொருந்திய நாடாகவும் இருக்கும் இந்தியா, சீனாவுடன் போட்டியிடக் கூடிய நிலைமையில் உள்ளது.
20 அடிக்கு சமமான 24 இலட்சம் அலகுகள் கொள்கலன்களைக் கையாளக்கூடிய மூன்று கப்பல்கள் தரித்து நிற்கக் கூடிய இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கான பணிக்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்டு 2007 ஜூனில் அவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. அய்ற்கென் ஸ்பென்ஸ் சிப்பிங் லிமிட்டெட் சிங்கப்பூரின் பி.எஸ்.ஏ. இன்ரர்நஷனல் கம்பனியுடன் பங்குதாரர்) ஹொங்கொங்கின் ஹட்சிசன் போர்ட் ஹோல்டிங்ஸ் (எச்.பி.எச்.) ஹெய்லீஸ் (பிரெஞ்சு கம்பனியான சி.எம்.ஏ- சி.ஜி.எம் முடன்பங்குதாரர்) ஆகியவை முன்னணி கேள்வி மனுதாரர்களாகும்.
அய்ற்கென் ஸ்பென்ஸ் கம்பனி 195.6 மில்லியன் டொலர்களுக்கும் எச்.பி.எச். 173.5 மில்லியன் டொலர்களுக்கும் ஹெய்லீஸ் 99 மில்லியன் டொலர்களுக்கும் கேள்வி மனுக்கோரி விண்ணப்பித்திருந்தன. அமைச்சரவை நியமித்திருந்த பேச்சுவார்த்தைக்குழுவும் தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவும் அய்ற்கென்ஸ்பென்ஸ் கம்பனிக்கு 78 புள்ளிகளும் எச்.பி.எச்.சுக்கு 69 புள்ளிகளும் ஹெய்லீஸுக்கு 60 புள்ளிகளும் வழங்கி சிபார்சுகளை முன்வைத்திருந்தன.
எவ்வாறாயினும் ஹட்சிசன் போர்ட்ஹோல்டிங்ஸிற்கு இந்த நிர்மாணப்பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை வழங்க முன்வந்தமைக்கான விசேடமான காரணங்கள் உண்டு என்று இலங்கை ஊடகத்தில் கப்பல்துறை தொடர்பான செய்திகளை எழுதுபவரான சர்மினி சேரசிங்க என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹட்சிசன் போர்ட் ஹோல்டிங்ஸிற்கு ஒப்பந்தத்தை கையளிப்பது தொடர்பாக ஊடகங்களில் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை இலங்கை கவனத்திற்கொள்ள வேண்டும் என்பது இந்தப் பிரசாரங்களில் முக்கியமானதொன்றாகும்.
கொழும்பு துறைமுகத்தின் 70 சதவீதமான பணிகளும் கொள்கலன்களை இடம்மாற்றிக் கப்பல்களில் அனுப்பும் பணிகளும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலேயே மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் இந்தியாவுக்கு முன்னிடம் இருப்பதும் இதன்மூலம் தெளிவாக தென்படும் விடயமாக உள்ளது. ஆதலால் துறைமுகத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படக்கூடிய தாக்கங்களை நன்கறிந்து இலங்கை செயற்படவேண்டு மென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெய்ஜிங்குடன் பிணைப்புகளைக் கொண்ட கம்பனியொன்றின் கரங்களுக்கு கொழும்புத் துறைமுகம் செல்வதை இந்தியா விரும்பமாட்டாது என்று சர்மினி சேரசிங்க ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் ஹட்சிசன் போர்ட் ஹோல்டிங்ஸின் உரிமையாளரான ஹொங்கொங்கிலிருக்கும் லீகா-சிங் சீன அரசாங்கத்துடன் வலுவான பிணைப்புகளை கொண்டவரெனவும் சேரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2006 இல் மும்பாயில் கொள்கலன் துறையை நிர்மாணிக்கும் திட்டத்தில் ஹட்சிசன் பங்குகொள்வது பாதுகாப்பு காரணங்களால் தடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களால் துறைமுகங்கள், தொலைத்தொடர்புகள் போன்ற பிரிவுகளில் சீனா முதலீடு செய்வதை அனுமதிப்பது தொடர்பாக நீண்ட காலமாகவே இந்தியா முன்னெச்சரிக்கையுடன் இருந்து வருகிறது. உண்மையில் இலங்கைக்கு ஜேவை 113 டி ராடரை வழங்க சீனா முன்வந்தது. அதனை இந்தியா ரத்து செய்துவிட்டது. ஏனென்றால் இந்த ராடர் அமைப்பு முறைமையானது. வான் பரப்பில் அதிக வீச்சை உள்வாங்கக்கூடியது. நாங்கள் (இலங்கை) பூகோள ரீதியாக இந்தியாவுக்குக் கிட்டிய தூரத்தில் இருக்கின்றோம்' என்றும் சேரசிங்க கூறியுள்ளார்.
அதேசமயம், லீகாசிங்கால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அமெரிக்காவுக்கும் பாதுகாப்புத் தொடர்பான அக்கறைகளை ஏற் படுத்தியுள்ளன. ஏனெனில் சீனாவுடன் அவர் கொண்டிருக்கும் தொடர்புகளே இதற்குக் காரணமாகும். பனாமாவில் ஹட்சிசன் போர்ட் ஹோல்டிங்ஸின் செயற்பாடுகளை விரிவு படுத்துவதற்கு அனுமதியளிப்பதற்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எச்சரிக்கை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக்கம்பனியை சீனாவின் முகவரெனவும் பனாமா கால்வாயில் அமெரிக்காவின் நலன்களுக்கு நீண்டகால அடிப்படையில் கேந்திர ரீதியான ஆபத்தைத் தோற்றுவிக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதையும் சேரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அயல்பக்கங்களில் ஊடுருவுவதன்மூலம் இந்தியாவை சீனா சுற்றிவளைத்திருப்பதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.
கேந்திரோபாய ரீதியிலான பிணைப்புகளை பாகிஸ்தானில் மட்டுமல்லாது நேபாளம், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளிலும் சீனா ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை சீனா நிர்மாணித்து வருகிறது. பாகிஸ்தானில் வடாரில் துறைமுகத்தை நிர்மாணித்து வருகிறது.
அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கடற்படை நடவடிக்கைகளை இதன்மூலம் அரபுக் கடலிலும் பாரசீகக் குடாவிலும் இந்து சமுத்திரத்திலும் வேவு பார்க்க முடியுமென வாஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரிம்சன் நிலையத்தைச் சேர்ந்த புத்திஜீவியான ஸியா ஹைதர் என்பவர் கூறியுள்ளார்.
அரபிக் கடலில் (கொழும்பு துறைமுகத்தில்) சீனா காலடி பதிப்பதை இந்தியா திறந்தமனதுடன் நிச்சயமாக வரவேற்காது என்று சேரசிங்க தெரிவித்துள்ளார்.