|
செல்வத்தம்பி மாணிக்கவாசகர்
திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் 4ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டை மார்ச் 21,22,23ஆம் (வெள்ளி,சனி, ஞாயிறு) திகதிகளில் மதுரையிலே மிகச் சிறப்பாக நடாத்தியது.
மேலும் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் தருமையாதீனம் 26- குருமகா சந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் 1984ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற இந் நிறுவனம் "ஞானசம்பந்தம்" எனும் இதழ் மூலம் பல ஆய்வுக் கட்டுரைகளையும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் தமிழுக்கு வழங்கி வருகிறது. மேலும் 1984இல் தருமபுரத்திலும் 1986இல் மலேசியாவிலும் 1988இல் வாரணாசியிலும் சைவசித்தாந்தக் கருத்தரங்குகளை மிகச் சிறப்பாக நடாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் இந்தியத் திருநாடு மிகப் பழமையான சிவவழிபாட்டிற்கும் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உரியதாகும். உலகின் மிகச் சிறந்த ஞானிகளும் அருளாளர்களும் வழங்கிய அரிய சைவசமய இலக்கிய வளங்களைப் பெற்று பெருமைக்குரியது. இத்தகு பழமையும் பெருமையும் உடைய சைவசமயம் உலகளவில் பரந்து கிடந்துள்ளது. நம் சைவசமய அருளாளர்களும் "உலகம்" என்பதை முன்வைத்துத் தம் அருட்பாக்களை வழங்கியுள்ளனர். சைவசமயம் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சங்க இலக்கியம், பன்னிரு திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இத்தகு பெருமையுடைய பழமையான இலக்கியங்களும் மரபுகளும் பண்பாட்டுக் கலாசாரங்களும் தற்பொழுது சிதைவுற்றும் சீர்குலைந்தும் வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ேமலும் பழமையான சைவசமய இலக்கியங்கள் குறித்த வினாக்களும் தர்க்கங்களும் புதிய சிந்தனைகளும் படைப்புகளும் பல நிலையில் வளர்ந்து வருகின்றன. அவற்றை முறைப்படுத்தவும் முழுமையாக ஆராய்ந்து பதிவு செய்திடவும் இம்மாநாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
இம்மாநாட்டில் சைவசமயத் திருமுறைகளில், சாத்திரங்கள், தத்துவங்களில் மிகவும் சிறந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வறிஞர்களும் ஆர்வலர்களும் பேராசிரியர்களும் சான்றோர்களும் கலந்து சைவசமய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
இம் மாநாட்டில் இந்தியாவில் உள்ள பல சைவ அமைப்புகளும் பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம், மலேசிய மகமாரி அம்மன் தேவஸ்தானம், அகில இலங்கை இந்து மாமன்றம், கனடா இந்து கலாசார மன்றம், அவுஸ்திரேலிய சைவமன்றம் உள்ளிட்ட பல சமய ஸ்தாபனங்களும் மற்றும் மொரீஷியஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளில் உள்ள சைவநிறுவனங்களும் பங்கு கொண்டன.
இம்மாநாட்டின் சைவ ஆதீனர்களின் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவசமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள் பலரும் கலந்து மாநாட்டை சிறப்பித்தனர். இம்மாநாட்டில் சிறப்பு மலர் ஒன்றும், இதைத் தவிர ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய மற்றுமொரு மலரும் வெளியிடப்பட்டன. இத்துடன் வேத, ஆகம, புராண, இதிகாச, சங்க இலக்கிய, திருமுறை, சித்தாந்த சாத்திர இலக்கியங்கள், சைவசித்தாந்தச் செம்பொருள் ஆய்வுகள் சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள் சிறப்பாக நடைபெற்றன.
21.03.2008 வெள்ளிக்கிழமை நடந்தேறிய மாநாட்டு நிகழ்வில் சித்பவானந்தா ஆசிரமம் வேதபுரியைச் சேர்ந்த பூஜ்ய ஷ்ரீசுவாமி ஓங்கார நந்தா தலைமையேற்றார். இதைத் தொடர்ந்து முன்னிலை ஏற்று வாழ்த்துரையை டி.ஆனந்தசேகரும், சிதம்பரப்பிள்ளை(லண்டன்) யும் வழங்கினர். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் (சென்னை) எஸ்.நடராஜன் அறுபத்துமூவர் (ஆங்கிலம்) நூலை வெளியிட்டு வைத்தார். மேலும் முதல் நாள் அமர்வில் தொகுப்பாசியுரையை ஷ்ரீலஷ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்(தருமபுரம்) வழங்கினார்.
22.03.2008 (சனிக்கிழமை) நடந்தேறிய மாநாட்டில் நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும் என்ற நூலை திருவண்ணாமலை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள் (குன்றக்குடி) வெளியிட்டு வைத்து ஆசியுரை வழங்கினார். இந்நூலுக்கு வாழ்த்துரையை சென்னை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையாளர் கு.பிச்சாண்டி வழங்கினார். மாநாட்டின் நினைவுரையை ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் (தருமபுரம்) வழங்கினார்.
மேலும், "நந்திக் கொடியின் முக்கியத்துவத்தையும், பெருமையையும்" இந்துக்களிடையே உணர்த்துவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமாகும். நந்தியை நந்தியப் பெருமான் என உயர்த்திக் கூறுவது சைவ மரபாகும். நந்தியப் பெருமான் இடது கையில் சூலமும் வலது கையில் செபமாலையும் கொண்டவர். ஒரு குரங்கால் உன் நகர் அழியும் என்று இராவணனுக்குச் சாபமிட்டவர் நந்தி. உலகம் முழுவதும் அழிந்தொழிந்த காலத்தில் சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்து அஷ்வ வாகனமாக நின்று வாழ்வு பெற்றவர்.
இத்துடன் நந்தி என்று பெயர் இந்திய நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டது. வட இந்தியாவில் ஒரு அரச மரபை நந்தர்கள் எனக் குறிப்பர். நந்தி என்பது பெண்களுக்கும் பெயராகச் சூட்டப்பட்டது. புராணத்தில் அருஷன் என்பவன் மனைவி பெயர் நந்தி. பராசர முனிவரின் மகள் பெயர் நந்தி.
இன்று சர்வதேச ரீதியாக நந்திக் கொடியை அங்கீகரிக்கும் பணியில் "விடைக் கொடிச் செல்வர்" சின்னத்துரை தனபாலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லண்டனில் இரு ஆண்டுகளாக பிரித்தானிய சைவ வலயங்களின் ஒன்றியத்தின் ஆதரவில் நடைபெற்ற 7ஆம், 8ஆம், சைவ மாநாட்டில் நந்திக் கொடி முக்கிய இடம் வகித்தது, அம்மாநாடு நந்திக் கொடியை சைவ சமயத்தின் தேசியக் கொடியாக அங்கீகரித்து விழா தொடங்குமுன் நந்திக் கொடியை வணக்கம் செய்த பின்பே விழாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையிலேயே மிகப் பெரிய இந்து சமய நிறுவனமாக விளங்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் 1999 இல் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது, அனைத்துலக சைவமக்களும் ஆலய விழாக்கள், கலாசார விழாக்கள், சைவ நிறுவனங்களின் விழாக்கள் அனைத்திலும் நந்திக் கொடியை ஏற்றிப் போற்றுவோம். இதனை சைவ மக்கள் ஒவ்வொருவரும் மனதிற்கொண்டு முன்னின்று செயலாற்ற வேண்டும். இது ஒவ்வொரு சைவ மகனதும் தலையாய கடமையாகும்.
மேலும், இலங்கைத் திருநாட்டின் இன, மத, ஒற்றுமைக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் சமூகங்களிடையே சுமுகமான உறவையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற பேராவல் கொண்ட அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அவர்களின் சிந்தனையில் கருக் கொண்டு காலப் போக்கில் முகிழ்ந்ததே இந்த நந்திக் கொடியின் தோற்றம்.
தமிழகத்தின் தலை சிறந்த நகரமாக விளங்கும் மதுரை மாநகரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஷ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு அருகாமையில் ஷ்ரீ காமாட்சி உபாசகர் என். இரவீந்திர சாஸ்திரி மூலமாக கண்கவர் வனப்புடன் இந்த நந்திக் கொடி தயாரிக்கப்பட்டு முதன் முதலாக இரத்மலானை இந்துக் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க இக் கொடி ஏற்றப்பட்டது. அத்தருணம் இந்துக்களுக்கிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த நந்திக் கொடிக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற சங்க மண்டபத்திலும் அதனைத் தொடர்ந்து அகில இலங்கை இந்து மாமன்ற நிகழ்வுகளிலும் இந்த நந்திக் கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. இன்று உலகளாவிய ரீதியில் அனைத்து ஆதீன கர்த்தாக்கள், ஆலய அறங்காவலர்கள் மற்றும் சைவ நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்த நந்திக் கொடியை ஏற்றி சகல நிகழ்வுகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவராகவும் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, மனித நேய நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் தர்ம கர்த்தாவாகவும் உலக சைவப் பேரவையின் (இலங்கைக் கிளை) கொழும்பு விவேகானந்த சபை ஆகியவற்றின் சிரேஷ்ட துணைத் தலைவர்களில் ஒருவராகவும் மற்றும் இந்து வித்தியாவிருத்திச் சங்கம் இந்து கலாசார நிதியம் ஆகிய வற்றில் ஆளுநர் சபை உறுப்பினராகவும் பௌத்த சங்கங்களின் போஷகராகவும் சேவையாற்றும் அமரர்களான சின்னத்துரை- சௌபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரர் தனபாலாவின் பெருமுயற்சியினாலேயே "நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்" என்ற நூல் மதுரையிலே அண்மையில் நடந்தேறிய 4 ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டில் வெளியிடப்பட்டு சைவ ஆதீனங்கள், அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவ சமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள் யாவரினதும் பாராட்டைப் பெற்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதற்காக ைசவ மக்களாகிய நாம் `விடைக் கொடிச் செல்வர்' சின்னத்துரை தனபாலாவை மனதாரப் பாராட்ட வேண்டும்.
உலகம் முழுவதும் வளமும் அமைதியும் நிம்மதியும் நிலவ சைவர்களாகிய நாம் யாவரும் நந்திக் கொடிகள் ஏற்றி பட்டொளி வீசிப் பறக்கவிடுவோமாக. |