|
தமிழ் மக்களின் பண்டைப் பெருமைகளைப் பறைசாற்றும் பல்வேறு பிரதேசங்களில் இந்துக்களின் வரலாற்றுச் சான்றாக விளங்கும் நந்தீஸ்வரம் எனும் திருத்தலம் இரத்மலானை எனும் புண்ணிய பூமியில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதி ஒன்றினை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கியவர் அமரர் வைத்திய கலாநிதி க.வேலாயுதபிள்ளை அவர்களாவர். இவர் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். அவர் அமரத்துவம் அடையும் போது அதன் தலைவராகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத்தலைவராகவும் மாமன்ற சமூக நலன் குழுத்தலைவராகவும் இருந்தார். இத்தகைய அரும்பெரும் பங்காற்றிய அமரருடைய பெயரை இவ்விடுதிக்குச் சூட்டவேண்டும் என ஆன்றோர் பலரால் தீர்மானிக்கப்பட்டு இன்று வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை விடுதி என்ற பெயருடன் சிறப்புடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்விடுதியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வந்தவர்களென அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் வி.கயிலாசபிள்ளை, மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், மாமன்றத்தில் முன்னர் பொருளாளராகவிருந்த மு.கந்தசாமி, சமூக நலன் குழுத்தலைவர் சின்னத்துரை தனபாலா, முன்னர் இக்குழுவின் செயலாளராகவிருந்த திருமதி வானதி ரவீந்திரன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
தலைநகரில் வாழ்கின்ற இந்துப்பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்பிய கல்விமான்களாலும் இந்துப் பெருமக்களாலும் தலைநகரிலும் ஆரம்பிக்கப்பட்ட பல பாடசாலைகளில் இரத்மலானை இந்துக்கல்லூரி முக்கிய இடம் பெறுகின்றது. இந்நாட்டில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட வன்முறைகளால் இரத்மலானை இந்துக்கல்லூரியும் பாதிக்கப்பட்டது. 1958, 1977, 1983 ஆகிய காலப்பகுதியில் இக்கல்லூரி வன்முறையால் பாதிப்புக்குள்ளானது.
1983 இல் ஏற்பட்ட வன்முறையில் இக்கல்லூரி அகதிமுகாமாகவும், பின்னர் இராணுவமுகாமாகவும் மாற்றப்பட்டது. இதனால் கல்லூரி 1983 க்குப்பின் தற்காலிகமாக தெகிவளை தமிழ் வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது அதிபராக ந.மன்மதராஜன் பணியாற்றினார். இக்கல்லூரி மீண்டும் தமது சொந்தக் கட்டிடத்தில் இயங்க வேண்டும் என்ற முயற்சியில் அதிபரும், அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து வித்தியா விருத்திச் சங்கமும் பெரும் சவால்களின் மத்தியில் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி.இராஜமனோகரி புலேந்திரன், அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எஸ்.செல்லச்சாமி, முன்னாள் கொழும்பு நகரபிதா க.கணேசலிங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இக்கல்லூரி மீண்டும் தனது சொந்தக் கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது.
மாணவர் விடுதி ஆரம்பிப்பதற்கு ஆர்வம் இருந்த போது கல்லூரிக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் இராணுவ முகாம் இருந்தமையாலும் இம்முயற்சி கைகூடவில்லை. இதற்குப்பிறகு பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் 1998 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15 ஆம் திகதியன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எமது விடுதி பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தன்னுடைய பத்தாண்டு வளர்ச்சியிலும் பல்வேறுபட்ட சாதனைகளைப் படைத்துள்ளது. அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது முக்கியதொரு கடமையாகும். எமது விடுதி பன்னிரண்டு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஓரிரு மாதங்களின் பின்னர் நாற்பது மாணவர்களைக் கொண்ட விடுதியாக வளர்ச்சியடைந்தது. சில காலங்களின் பின்னர் நூற்றிற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு தன்னுடைய வளர்ச்சிப்பாதையில் செவ்வனே சென்று கொண்டிருக்கிறது. அகில இலங்கை இந்த மாமன்றம் செய்கின்ற சமூகப் பணிகளில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இரத்மலானை இந்துக்கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் காணியில் பெண்பிள்ளைகளுக்காக "சக்தி இல்லம்" என்ற பெயரில் விடுதியொன்று 09.06.2002 இல் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்த மகராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விடுதியில் பதினைந்து வயதிற்குட்பட பெண்பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். குறுகிய கால இடைவெளிக்குப் பின்னர் நாற்பதிற்கும் மேற்பட்ட பிள்ளைகள் இச்சக்தி இல்லத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவ்விடுதியைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியுடன் இணைந்து கல்வி கற்பதற்கான சகல வசதிகளும் உணவு, உடை, கற்பதற்குத் தேவையான மேலதிக இலவசப்பாடப்போதனை வசதிகளும் உட்பட பல சலுகைகளும் அகில இலங்கை இந்து மாமன்றம் விடுதி மாணவர்களுக்காக வழங்கிவருவது போற்றத்தக்க விடயமாகும்.
மேலும் விடுதி மாணவர்கள் தங்களுடைய வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக நூலகம் ஒன்று 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 30 ஆம் திகதி பிரதிக் கல்வி அமைச்சர் கௌரவ மு.சச்சிதானந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அது இன்று எமது விடுதி மாணவர்களுக்கு சிறந்த பயனுடையதாக இருக்கின்றது. இன்றைய நவீன உலக வளர்ச்சியில் கணினித் துறை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கணினித் துறையில் எமது விடுதி மாணவர்கள் சிறந்து விளங்குவதற்காக அகில இலங்கை இந்து மாமன்றம் கணினி அறை ஒன்றை ஒழுங்கு செய்து கடந்த வருடம் (2007) விடுதியின் ஒன்பதாம் ஆண்டின் நிறைவு விழாவின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. எமது மாணவர் விடுதியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாகவிருந்து செயற்பட்டு வரும் விடுதிகள் குழுவின் தலைவர் மா.தவயோகராஜா, குழுச் செயலாளர் திருமதி.அ.கயிலாசபிள்ளை ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டிப் போற்றப்பட வேண்டும்.
அகில இலங்கை இந்து மாமன்றம் செய்து வருகின்ற பல்வேறுபட்ட சமூகப்பணிகளின் மற்றுமொரு அம்சமாக "செல்வா இல்லம்" என்ற பெயரில் முதியோர்களுக்கான புதிதயே விடுதியொன்று 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது. இது இரத்மலானையில் பொறுப்பன வீதியில் முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது.
எமது விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறுபட்ட துறைகளில் சிறந்த விளங்குகின்றார்கள். வணிகத்துறை, பொறியியல் துறை, ஊடகத்துறை, ஆசிரியத்துறை, ஆன்மீகத்துறை ஆகிய துறைகளில் சிறந்துவிளங்குகின்றனர். கடந்த ஆண்டில் கூட இந்தியப் புலமைப்பரிசில் பெற்று ஐந்து மாணவர்கள் உயர்கல்வி பெற சென்றமை குறிப்பிடத்தக்கது. இதே போன்று இவ்விடுதியில் இருந்து கல்வி கற்ற மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்பதவிகளைப் பெற்று பணியாற்றி வருவது விடுதிக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். எமது விடுதி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழ் சார்ந்த துறைகளிலும், சமூகப்பணி சமயப்பணிகளிலும் சிறந்து விளங்குகின்றனர். யோகாசனப்பயிற்சி பெற்ற எமது மாணவர்கள் யோகாசனத்தில் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள்.
இந்தப் பத்தாண்டு வளர்ச்சியில் எமது விடுதி பல சாதனைகளைப் படைத்துள்ளது. பல்வேறுபட்ட தடைக்கற்களைத்தாண்டியே இவ் விடுதி இத்தகைய வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு கல்லூரியின் முன்றிலில் இருக்கும் கற்பக விநாயகரின் அருட்கடாட்சமும், அகில இலங்கை இந்து மாமன்றத்தினரின் மனித நேயமும் காரணங்கள் என்றால் அது மிகையாகாது. |