|
விதுரன்
இதனொரு கட்டமாகவே, மன்னார் - பூநகரி கரையோரப் பாதையை கைப்பற்றிவிட்டால் முகமாலையிலிருந்து ஆனையிறவு நோக்கிய முன்நகர்வு முயற்சிக்கு அவசியமேற்படாதென படைத்தரப்பு கருதுகிறது. ஏனெனில் இந்தப் பாதையைக் கைப்பற்றி பூநகரிக்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து, பின்புறப் பக்கமாகத் தாக்குதல் தொடுத்து முகமாலை மற்றும் பளைப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள புலிகளை செயலிழக்கச் செய்துவிட முடியுமென படைத்தரப்புக் கருதுகிறது.
யாழ் . குடாநாட்டை பாதுகாப்பதற்காக பூநகரியைக் கைப்பற்ற வேண்டிய அவசிய அவசர தேவை படையினருக்கிருப்பது போல், யாழ். குடாநாட்டை மீளக் கைப்பற்றுவதற்காக, முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் மிகவும் வலுவான நிலையிலுள்ள படையினர் மீது தாக்குதலைத் தொடுத்து கொடிகாமத்தை புலிகள் கைப்பற்றிவிட்டால் குடாநாட்டிலுள்ள அனைத்துப் படைத்தளங்களையும் தங்கள் ஆட்லறி ஷெல் வீச்சுத் தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வந்து குடாநாட்டை முற்று முழுதாக செயலிழக்கச் செய்து சகல விநியோகப் பாதைகளையும் முழுமையாக மூடி விடலாமென புலிகள் கருதுகின்றனர். இதனால், கிளாலி- முகமாலை - நாகர்கோவில் அச்சில் இருதரப்பும் தங்கள் நிலைகளை மிக மிக இறுக்கமாகப் பலப்படுத்தி சிறு அசைவுகளைக்கூடத் தடுத்து நிறுத்தி விடுவதில் கண்ணும் கருத்துமாயுள்ளன.
இதேநேரம், மன்னார்- பூநகரி ப்பாதையூடான நகர்வு முயற்சி வெற்றியளித்தால் மேற்குபுறக் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் முழுமையாக இல்லாதுபோய் விடுமென்பதுடன், தமிழ்நாட்டுடனான புலிகளின் கடல்வழித் தொடர்பும் முழுமையாக அற்றுப் போய்விடுமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.
இதனால், மன்னாரில் மடுத் தேவாலயப் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் பெரும் அரசியல் இலாபம் கிடைக்குமெனக் கருதும் அரசு, மன்னார்- பூநகரிப் பாதையை கைப்பற்றுவதன் மூலம் குடாநாட்டின் மீதான புலிகளின் அச்சுறுத்தலை நிறுத்தி, குடாநாட்டுக்கு தரை வழிப்பாதையொன்றைத் திறந்து புலிகளை வன்னிக்குள் மூன்று புறங்களிலும் சுற்றிவளைத்து விட்டு மணலாறிலிருந்து முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து அவர்களுக்கு மிகப் பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கலாமென படைத்தரப்புக் கருதுகிறது.
படையினர் இவ்வாறெல்லாம் கருதுகையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்தவாரம் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டமையானது குடாநாட்டுக்கான கடல்வழிப் பாதையை பெரும் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்.குடாநாட்டுக்கு கரையோரமாக தரைவழிப் பாதை யொன்றை திறக்க படையினர் முற்படுகையில் யாழ். குடாநாட்டுக்கான கடல்வழிப் பாதையை மூட புலிகள் முற்படுகின்றனர்.
நாயாறு தாக்குதல் பெரும் மர்மமாகவே உள்ளதாகக் கடற்படையினர் கூறி வருகின்ற போதும் இந்தக் கடற்சமரில் தங்கள் தரப்பில் லெப்.கேணல் ஒருவரும் இரு மேஜர்களும் உயிரிழந்ததாக புலிகள் கூறியுள்ளனர். கடல் கண்ணிவெடியா அல்லது நீருக்கடியிலான தாக்குதலா இதற்குக் காரணமெனத் தெரியாது கடற்படையினர் தடுமாறுகையில் இந்தச் சமரில் மூன்று போராளிகள் உயிரிழந்ததாகப் புலிகள் அறிவித்தது படையினரை மேலும் குழுப்பமடையச் செய்துள்ளது.
டோராப் படகு வெடித்துச் சிதறிய போது உயிர் தப்பிய படையினரின் கூற்றுப்படி, கடற்சமர் நடைபெறவில்லை எனக் கடற்படையினர் கூறுகின்றனர். அப்படியாயின் இந்த மூன்று கடற் கரும்புலிகளும் எவ்வாறு உயிரிழந்தனரென்ற கேள்வி கடற்படையினர் மத்தியில் எழுந்துள்ளது. உயிரிழந்த போராளிகளின் விபரங்ளை வெளியிடுவதில் புலிகள் ஒருபோதும் தயங்கியதில்லை என்பதை படைத்தரப்பும் அறியுமென்பதால், வெடி குண்டுகளைப் பொருத்தியவாறு கடற்கரும்புலிச் சுழியோடிகள் டோராவை நோக்கி நீருக்கடியால் சென்று தாக்குதலை நடத்தினார்களா என்ற கேள்வி எழுகையில் ரோந்தில் ஈடுபடும் டோராவை துரத்திச் சென்று சுழியோடிகளால் எப்படித் தாக்க முடியுமென்ற கேள்வியும் படையினர் மத்தியில் எழுகிறது.
அதேநேரம், கடற்புலிகள் புதிய உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாமெனக் கருதும் கடற்படையினர், கடற்கரும் புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்காக கடலுக்கடியிலான பாதுகாப்புப் பொறிமுறைகளைத் தேட வேண்டியிருப்பதுடன், துருப்புக் காவிக் கப்பல்கள் பல நூற்றுக்கணக்கான படையினரை யாழ். குடாநாட்டுக்கும் திருகோணமலைக்குமிடையே நகர்த்துகையில் இவ்வாறானதொரு தாக்குதலை கடற்புலிகள் மேற்கொண்டால் அது எவ்வாறிருக்குமெனக் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத நிலையிலுள்ளனர்.
அத்துடன், புலிகளின் தாக்குதல் உத்தியையும் அதற்கான தற்காப்புப் பொறிமுறையையும் கண்டுபிடிக்கும் வரை முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ஆழ்கடலில் சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியிலேயே பயணங்களை மேற்கொள்ள முனைவர். இது மிக நீண்ட நேரப் பயணங்களாயிருப்பதுடன், மிகவும் செலவு கூடியவையாகவும் இருக்கப் போகின்றன.
வடபகுதிக் கள முனையில் எதிர்பார்த்த பலன்கள் விரைவாகக் கிட்டாத நிலையில், வடபகுதிக் கடற்பரப்பில் கடற்படையினர் புதிய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது. இது படையினருக்கான விநியோகங்களை மட்டுமல்லாது கடல்வழியூடான படையினரின் பாரிய நகர்வுகளையும் வெகுவாகப் பாதித்து விடலாமென எச்சரிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மாற்றுவழிகளைத் தேடும் நிலைக்கு படைத் தலைமைகள் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொழும்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாகக் கூட்டிய ஜனாதிபதி, அங்கு வடபகுதி போர் நிலைமைகள் குறித்து மிக நீண்ட நேரம் ஆராய்ந்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வடபோர் முனையிலுள்ள முப்படைகளது கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டு களத்தின் உண்மை நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர். கள நிலைமை மிகவும் இறுக்கமடைந்து வருவதையே இது காட்டுகிறது. |