Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதார தொழில்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கைகளின் தாக்கம்
[04 - March - 2008] [Font Size - A - A - A]
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தா

நாட்டில் மார்கழி 2005 இல் மீள ஆரம்பிக்கப்பட்ட மோதல்கள் ஆடி 2006 பிற்பகுதியில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உக்கிரமடைந்ததனால் ஏராளமான மக்களின் வாழ்வாதாரத் தொழில்கள் இடப்பெயர்வுகளினாலும் பாதுகாப்புத் தொடர்பான கட்டுப்பாடுகளினாலும் பெரிதும் பாதிப்படைந்தன. நாட்டுக்கு உள்ளும் வெளியும் தொழிற்படும் பல ஊடகவியலாளர்களும் மனிதநேய அமைப்புகளும் பிரதேசத்து மக்கள் அனுபவித்த மனித அவலங்களைப் பற்றி எடுத்துரைத்துள்ளனர். இருப்பினும், பாரிய இடப்பெயர்வுகளினாலும் பாதுகாப்புக் காரணங்களினால் விதிக்கப்பட்ட தடைவரம்புகளினாலும் விளைவிக்கப்பட்ட வாழ்வுத் தொழில்களின் இழப்புகள் குறித்த மதிப்பீடுகள் ஒன்றும் செய்யப்படவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் மனித பாதுகாப்பு ஆகிய இரண்டிற்குமிடையே,உள்ளூர் யுத்தம் தீவிரமடைந்து செல்லும் வேளையில் பதற்ற நிலைகள் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளன.

கிழக்கு மாகாணம் ஒரு கரையோர மாகாணமாக இருந்ததினால் தீவிரமான மோதல்கள் கரையோரப் பகுதிகளில் 2006 நடுப்பகுதியிலிருந்து 2007 நடுப்பகுதிவரை ஏற்பட்டன.இப் பின்னணியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மீன் பிடித்தலே மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.அத்தோடு விவசாயமும், மக்கள் இடப்பெயர்வுகளினாலும் உள்ளீடுகளின் விலை அதிகரிப்பினாலும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமையினாலும் முக்கிய பாதிப்புக்களை அனுபவிக்க நேரிட்டது. மேலும், மொத்த, சில்லறை வியாபாரமும் அதிகம் பாதிக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்துப் பிரச்சினைகள், அதிகளவான வீதித் தடைமுகாம்கள், பாதுகாப்பற்ற நிலையில் வாடிக்கையாளர்களின் வருகை குறைவடைந்த நிலை மற்றும் உயர்ந்து சென்ற வாழ்க்கைச் செலவினால் கொள்வனவுச் சக்தி குறைவடைந்து நுகர்வோர் நிலை ஆகியவை முக்கிய பொறுப்பாக இருந்துள்ளன.

1.குறிக்கோள்

பண்புசார் மதிப்பாய்வு முறைகளை பயன் படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீட்டில் மூன்று மாவட்டங்கள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய ஓவ்வொன்றிலும் தெரிந்தெடுத்த இடங்களில் வாழ்வாதாரத் தொழில்கள் வெளியீடு எவ்வளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை விரைந்த மதிப்பீட்டு முறையில் கண்டவாறு பிரதான நோக்கமாகின்றது. இம்முன்னோடி ஆய்வு கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்த இடங்களில் விவசாயம், மீன்பிடி மற்றும் வியாபார வாழ்வாதாரத் தொழில்களில் ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவாக இருந்திருக்கும் என்பதை மதிப்பீடு செய்துள்ளது. இந்த முன்னோடி முயற்சி கமத்தொழில், மீன்பிடி மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள 62 பதிலிறுப்பாளர்களின் தகவல்களின் அடிப்படையில் வெளியீட்டில் இழப்பு (அளவு ரீதியாக), வருமானத்தில் இழப்பு (பெறுமதி ரீதியாக) பொருள்களின் விலைகளில் மாற்றம், சந்தைவாய்ப்புக் கிடைப்பு, வாழ்வாதாரத் தொழில்களில் ஏற்பட்ட பிரச்சினைகள், மாற்று வாழ்வாதாரத் தொழில் வாய்ப்புகள் என்பவை பற்றி மதீப்பீடு செய்துள்ளது. இங்கே பயன்படுத்திய மாதிரியெடுப்பு கிழக்கு மாகாணத்தின் மற்றைய கமக்காரர்கள் மீன்பிடியாளர்கள், மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கருதமுடியும். இம் மாதிரி அளவையானது முறையான அர்த்தமுள்ள ஆய்வினை மேற்கொள்வதற்கு மிகவும் சிறியதாக உள்ளது என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

2. ஆய்வுமுறை

அங்கொன்றும் இங்கொன்றுமான மாதிரி எடுப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெல் கமக்காரர்கள், மீன்பிடியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்பாக மூன்று மாவட்டங்களும் உள்ளடங்கலாக கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டது. இம்முன்னோடிக் கணிப்பு உள்ளடக்கப்பட்ட ஒவ்வொரு வாழ்வாதார தொழில்கள் குறித்தும் ஒரு அரை கட்டமைப்பு இயல்புடைய வினாக்கொத்து பயன்படுத்தப்பட்டது. இவ்வினாக்கள் திறந்த தன்மை கொண்டவையாக அமைந்தன. மொத்தமாக 62 வினாக்கொத்துக்கள் அடிப்படையான நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. இவை மூன்று மாவட்டங்களிலும் முறையே அம்பாறை 20, மட்டக்களப்பு 20 மற்றும் திருகோணமலை 22 என்ற வகையில் நடந்தன. தொழில்கள் ரீதியாக 23 மீன்பிடியாளர்கள், 22 நெல்கமக்காரர்கள் மற்றும் 17 வர்த்தகர்கள் எனக் கணிப்பில் இடம்பெற்றனர். இச் சிறிய மாதிரியெடுப்பிலிருந்து கிடைத்த விடையளிப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் விரிவான கணிப்பினைச் செய்ய முடியுமானால் பரந்த விதமான பொதுமைப்படுத்தல்களும் முடிவுகளும் கிடைக்கலாம். மேலும், மீன்பிடியும் நெற் பயிர் செய்கையும் பருவகாலத் தொழில்களாக இருப்பதனால் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாற்றங்களைக் கண்டறிதல் கடினமானது. எப்படியாயினும், இந்த முன்னோடி ஆய்வானது, அதில் ஆராயப்பட்டு எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் பற்றி மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு அடிப்படையாக அமைய முடிகின்றது. இவ்வாய்வு ஆவணி 2007 இன் பிற்பகுதியில் செய்யப்பட்டது. இக் காலமானது மெய்சான்றுகளின் அடிப்படையில் எந்தவொரு ஆய்வினையும் மேற்கொள்வதற்கு மிகவும் குறுகிய காலம்.

3.கணிப்பின் முடிவுகள்

இப்பகுதியில் முன்னோடிக் கணிப்பின் முடிவுகள் ஆறு மாறிகளின் பாகுபாட்டின் அடிப்படையில் ஆராயப்படுகின்றது.

3.1. வெளியீட்டின் அளவில் ஏற்பட்ட மாற்றம்

பெரியளவான இடப்பெயர்வுகள் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஏற்பட்டதனால் உற்பத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பதிலிறுப்பாளர்களிடமிருந்து 2006 இல் மோதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்னராக இருந்த அவர்களின் சராசரி உற்பத்தி வெளியீடு பற்றியும் தற்போதுள்ள நிலைமையில் உள்ள அதனுடைய அளவு பற்றியும் கேட்கப்பட்டது. மீன்பிடி மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட வாழ்வாதார நடவடிக்கையாகவும் திருகோணமலை இதுகுறித்து மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகவும் காணப்பட்டுள்ளது.

விவசாயத்துறையில் நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட நெற் பயிர்ச் செய்கையின் வெளியீடு திருகோணமலை மாவட்டத்தில் 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகக் காணப்படவில்லை. மீன்பிடித்துறையில் பிடிக்கப்பட்ட மீனின் தொகை திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்திருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீழ்ச்சி மிகக் குறைவானதாகக் காணப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட மீன்பிடியாளர்களிடையே நாளாந்தம் கிடைக்கும் சராசரி மீன்பிடி அளவுகளில் திருகோணமலையில் 64 சதவீதமாகவும் அம்பாறையில் 29 சதவீதமாகவும் மட்டகளப்பில் 4 சதவீதமாகவும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. வர்த்தகத் துறையில் திருகோணமலை மாவட்டத்தில் நேர்காணல் செய்யப்பட்ட வர்த்தகர்களிடையே மோதல் திரும்பவும் ஆரம்பித்த கட்டத்திலிருந்து நாளாந்தம் சராசரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்று பங்களவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி 13 சதவீதமாகவும் அம்பாறை மாவட்டத்தில் 5 சதவீதமாகவும் மட்டும் காணப்பட்டுள்ளது.

மேலே தரப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் மோதல்கள் மீண்டும் ஆரம்பித்த காலத்திலிருந்து திருகோணமலை கிழக்கு மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக காணப்பட்டுள்ளது.

3.2 வெளியீட்டின் பெறுமதியில் மாற்றம்

வெளியீட்டின் பெறுமதி நோக்கிலும் திருகோணமலை மாவட்டம் மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது தெரிகின்றது. மற்றைய இரண்டு மாவட்டங்களிலும் வெளியீட்டின் பெறுமதி, அம்பாறையின் மீன்பிடியளவு தவிர அதிகரித்துள்ளது.

விவசாயத்துறையில் நெல்லின் வெளியீட்டுப் பெறுமதி சிறிதளவாக 4 சதவீதத்தால் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்தது. ஆனால், அது கூடியளவுக்கு 10 சதவீதத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்தனை அறியமுடிகின்றது. எப்படியிருப்பினும் திருகோணமலையின் நிலைமையில் பதிலிறுப்பாளர்களின் தகவல்களின்படி, நெல்லின் வெளியீடு பெறுமதியடிப்படையில் 24 சத வீதமாகக் குறைந்துள்ளது. அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் நெல்லின் சராசரிப் பெறுமதியின் அதிகரிப்பு, குறைந்த வெளியீடு / நிரம்பல் காரணமாக உயர்ந்த விலை கிடைத்ததனால் ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலும் நெல்லின் வெளியீட்டின் சராசரிப் பெறுமதியின் வீழ்ச்சி (-24%) சராசரி வெளியீட்டளவின் வீழ்ச்சினை விட (-40%) குறைந்திருந்துள்ளது. இது காட்டுவது என்னவென்றால் உயர்ந்த விலையானது வெளியீட்டின் குறைவினை ஓரளவுக்கு ஈடுசெய்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட மீன்களின் அளவுகளின் சராசரி, பதிலிறுப்பாளர்களின் தகவல்களின்படி மோதல்களுக்கு முன்னான காலத்துடன் ஒப்பிடும் பொழுது, 59 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வீழ்ச்சியானது 10 சதவீதமாகக் காணப்பட்டுள்ளது. எப்படியாயினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளியீட்டின் சராசரிப் பெறுமதி 21 சதவீத அளவாக அதிகரித்தது. மீனுக்கான உயர்ந்த விலை மீன்பிடியளவில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டது. இது எல்லா மாவட்டங்களிலும் வெளியீட்டின் குறைவினை ஓரளவுக்கு ஈடுசெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில், சராசரி மீன்பிடி பெறுமதி 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை, சராசரி மீன்பிடி அளவு 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது காட்டுவது என்னவென்றால் விலை உயர்வு வெளியீட்டின் வீழ்ச்சிக்கு மேலான அளவுக்கு ஈடுசெய்துள்ளது.

வர்த்தகர்களிடையே நாளாந்த சராசரி விற்பனைப்புரள்வு முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் 35 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. எப்படியாயினும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நாளாந்த சராசரி விற்பனையளவு முறையே 16 சதவீதத்தாலும் மற்றும் 10சதவீதத்தாலும் ஏற்றமடைந்தது. வாடிக்கையாளர்களின் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியும் (-33%) மற்றும் சராசரி விற்பனைப் புரள்வில் ஏற்பட்ட குறைவும் (-35%) திருகோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரே அளவாக இருந்துள்ளது. இது காட்டுவது எதுவென்றால், பொருள்களின் விலைகளின் அதிகரிப்பும் மற்றும் நுகர்வில் அளவுரீதியான குறைவும் முக்கியமானதாக இருக்கவில்லை மறுபக்கத்தில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சராசரி விற்பனைப் புரள்வு முறையே 16 சதவீதத்தினாலும் மற்றும் 10 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இது பொருட்களின் விலைகளின் அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக நோக்குமிடத்தில் மேலே காட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக் கூறுவது. வெளியீடுகள்/ வாடிக்கையாளர்கள் வெவ்வேறு துறைகளில் குறைந்துள்ள பொழுதிலும் பொருட்களின் உயர்ந்த விலைகளும் அப்பொருள்களின் விற்பனையும் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியினை ஓரளவுக்கு அல்லது மேலானதாக ஈடுசெய்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மட்டும் பொருள் உற்பத்தி அளவுகளிலும் மற்றும் வெளியீடுகளின் பெறுமதிகளிலும் வீழ்ச்சியினை அனுபவித்துள்ளது. ஆனாலும், அளவுகளில் காணப்பட்ட வீழ்ச்சி பெறுமதிகளில் ஏற்பட்டதைவிட விலைகளின் அதிகரிப்பினால் உயர்வாக இருந்துள்ளது.

3.3 பொருளின் விலை மாற்றம்

ஏற்கனவே விளக்கப்பட்டுள்ள இரு பகுதிகளின் முடிவுகள், இப்பகுதியின் முடிவுகளுடன் ஒத்துச் செல்கின்றன. நெல் மற்றும் மீனின் சராசரி விலைகள் அதிகளவுக்கு ஏற்றமடைந்துள்ளன. அத்துடன் வர்த்தகத்தில் இருந்த பணியாட்களின் சராசரி எண்ணிக்கை தற்பொழுது, மோதல் ஆரம்பிப்பதற்கு முன்னராக உள்ள காலத்துடன் ஒப்பிட்ட நோக்கில் வீழ்ச்சியடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் நெல்லின் சராசரி விலை அதிகமாக ஏற்றமடைந்துள்ளது (22%). இது குறித்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மோதலுக்கு முன்னான காலத்துடன் ஒப்பிடும் பொழுது, சராசரி விலை குறைந்தளவில் ஏற்றமடைந்தது (முறையே 4% மற்றும் 8%) வெளியீடு/ நிரம்பல் என்பதில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்ந்த விலைகளுக்குக் காரணமாக இருந்துள்ளது. மேலும், நெல்லின் உயர்ந்த விலைகள், வெளியீட்டின் பெறுமதியினை அதிகரிக்கச் செய்துள்ளது. அவ்வாறு ஏற்பட்டதனால் வெளியீட்டின் வீழ்ச்சியை ஓரளவுக்கு ஈடுசெய்ய முடிந்துள்ளது.

தொடரும்

Email this page Your Opinion Print this page
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கருணாநிதி ஏன் தடுமாறுகின்றார்?
கிழக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதார தொழில்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கைகளின் தாக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com