அரசாங்க பாடசாலைகளில் இந்த வருடம் முதல் உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவுகளில் பாடங்களை ஆங்கிலமொழியில் போதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாகவும் அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.
உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன், அதனைக் கற்க வேண்டிய தேவையும் இலங்கை உட்பட சகல நாடுகளின் மாணவர்களுக்கும் மிக அவசியமானதாக உருவெடுத்திருக்கிறது.
1956 இல் சுயபாஷைக் கொள்கையை கட்டாயமாக அமுல்படுத்தும் சட்டம் கொண்டுவரப்படும் வரை உயர் கல்விக்கான மொழிமூலம் ஆங்கிலமாகவே இலங்கையில் இருந்துவந்தது. பின்னர் தனிச் சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை இலங்கையின் இனநெருக்கடி மோசமடைவதற்கு பிரதான காரணியாக விளங்கியது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், அரச பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலக் கல்வியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து வைத்தார்.
தனியார் பாடசாலைகளும் அரசாங்கப் பாடசாலைகளில் தேவையான பௌதிக வளங்களைக் கொண்ட பாடசாலைகளும் ஆங்கில மொழிமூலக் கல்வியை படிப்படியாக ஆரம்பித்திருக்கும் நிலையில், இப்போது உயர்தர வகுப்புகளில் வர்த்தக, கலைப்பிரிவுகளிலும் ஆங்கிலத்தில் பாடங்களைப் போதிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் செல்வந்த வர்க்கத்தினரின் பாவனைக்கே அதிக அளவில் உட்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதன் பாவனை இப்போது நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் சமூகத்தில் பொருளாதார ரீதியில் தாழ்ந்த மட்டத்தினர் மத்தியிலும் அன்றாட பாவனைப் பொருளாக அதாவது தொடர்பாடலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் பொருளாக மாறிவிட்டதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதனைப் போன்றே இலங்கையில் மத்திய தர வர்க்கத்தினர் மத்தியிலும் ஆங்கிலமொழி பயன்படுத்தப்படும் இரண்டாவது மொழியாகிவிட்டது.
வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்திச் சேவை, விளம்பரம் போன்ற சகலவற்றையும் இப்போது ஆங்கிலமொழி ஆக்கிரமித்து வருகிறது. உண்மையிலேயே எமது தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து பயன்படுத்துவது தற்போதைய தலைமுறையினரிடம் மிக அதிகளவில் ஊடுருவிப் பரவிக்காணப்படுகின்றது.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் விளைவாகவே இலங்கையில் ஆங்கிலமொழிப் பாவனையின் தேவை அதிகரித்ததென்றாலும் தற்போதைய உலக ஒழுங்கு முறையில் அதன் பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது.
இலங்கையைப் பொறுத்தவரை நடுத்தர, தாழ்ந்த மட்டத்திலுள்ள பெற்றோர்கள் சர்வதேசப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பி ஆங்கில மொழிமூலக் கல்வியை அவர்களுக்கு வழங்கக்கூடிய பொருளாதார நிலைமை இல்லை. ஆனால், தற்போது அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மாத்திரம் இதற்குத் தேவையான ஆசிரியர்கள் உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் சகல பிரதேசங்களுக்கும் குறிப்பாகப் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
தாய்மொழியில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் கற்பது ஆரம்ப கட்டத்தில் சிறிதளவு கஷ்டமான காரியமாக இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் காலக்கிரமத்தில் சமாளித்துக் கொண்டு புதிய உலகத்திற்குள் பிரவேசித்து விடுவார்கள்.
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தாய்மொழியில் கல்வி கற்பதை அரசாங்கம் ஊக்குவித்து வந்த போதும் தற்போது ஏற்பட்டிருக்கும் அதன் பெறுபேறுகள் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாய்மொழி மூலக் கல்வியே பிள்ளையின் சிந்தனை ஆற்றலை ஊக்குவிக்கின்றது என்று கூறப்படுவது உண்மையாக இருந்தாலும் யதார்த்தபூர்வமாகப் பார்த்தால் கடந்துவந்த 50 ஆண்டுகளிலும் வேலைவாய்ப்பு இல்லாதோரின் தொகையே அதிகரித்துக் காணப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?
20 ஆம் நூற்றாண்டில் இலங்கை உட்பட பல நாடுகளில் ஆங்கிலமானது கற்றறிந்த குழாமின் மொழியாக மாறியது. பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஊக்குவிப்பு அளிக்கப்பட்டாலும் இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் இந்தக் கொள்கை மக்கள் மத்தியில் பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை.
தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்புக்குரியவையாகும். ஆனால், பாரிய பிரச்சினையாக இருப்பது ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையாகும்.
அரசாங்கப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் ஆங்கில மொழியில் பாடங்களைப் போதிப்பதற்குரிய ஆசிரியர்கள் போதியளவில் உள்ளனரா என்பது தற்போது முன்னெழுந்திருக்கும் கேள்வியாகும். இந்தப் பிரச்சினைக்கு துரிதமான தீர்வினை அரசாங்கம் கண்டு கொண்டால் இத்திட்டம் வெற்றியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.