தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியாவைச் சேர்ந்த தூக்குத் தண்டனைக் கைதியை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் மனித உரிமைக்கான அமைச்சர் அன்சார் புர்னே, லாகூர் சிறையைப் பார்வையிடச் சென்றபோது அங்கு காஷ்மீர் சிங் என்ற தூக்குத் தண்டனைக் கைதி 35 ஆண்டுகளாக வாடுவதை அறிந்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிடம் கருணை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருணை மனுவை ஏற்று காஷ்மீர் சிங்கை விடுவிக்க முஷாரப்பும் ஒப்புக் கொண்டார். உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 1973 இல் ராவல்பிண்டியில் காஷ்மீர் சிங் கைது செய்யப்பட்டார்.
இராணுவ நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. நீண்ட நாட்கள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்ததால் மன ரீதியாக அவர் பாதிக்கப்பட்டார். இந்நிலையில்தான் அமைச்சர் புர்னே லாகூர் சிறையைப் பார்வையிடச் சென்றபோது காஷ்மீர் சிங்கின் பரிதாப நிலையை அறிந்து அவருக்கு உதவ முடிவு செய்தார். மனநிலை பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் சிங்குக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிங்கின் குடும்பத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஹோசியார்பூரில் உள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து காஷ்மீர் சிங்கை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
காஷ்மீர் சிங் முதலில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸில் பொலிஸாகப் பணியாற்றி உள்ளார். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பொருட்களைக் கடத்துவதாகக் கூறி அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் பாகிஸ்தானில் உள்ள பெஷாவருக்குச் சென்றார்.
அப்போது உளவு பார்க்க வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. காஷ்மீர் சிங் 16 வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் தற்போது எங்கே உள்ளனர் என்று தேடிக் கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் சிங்கைப் போன்று வேறு இந்தியர்கள் யாராவது பாகிஸ்தான் சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமை அமைச்சர் அன்சார் புர்னே தெரிவித்தார்.