காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு விடுக்கப்படும் சர்வதேச அழைப்புகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் அப்பகுதி மீதான இராணுவ நடவடிக்கையை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்படும் போராளிகளின் ரொக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக தனது பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்ற நியாயப்படுத்தலுடன், கடந்த புதன்கிழமை இஸ்ரேலினால் ஆரம்பிக்கப்பட்ட இத் தாக்குதல்களுக்கு இதுவரை 100 இற்கும் அதிகமான பாலஸ்தீனர்களும் 3 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பாஸஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் இஸ்ரேலுடனான உறவுகளை சம்பிரதாயபூர்வமாக இடைநிறுத்தியுள்ளார்.
வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக சர்வதே சமூகத்துடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகமும் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் அளவுக்கதிகமான தாக்குதல்களை மேற்கொள்வதாக விமர்சித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேல் மீதான ரொக்கட் தாக்குதல்களை நிறுத்துமாறு பாலஸ்தீன போராளிகளை கோரியுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் நட்பு நாடுகளில் ஒன்றான துருக்கியின் பிரதமர் ரிசெப் தாயிப் எர்டோகன் காஸா மீதான தாக்குதல்களை எந்த ரீதியிலும் நியாயப்படுத்த முடியாதெனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்றுக் காலை காஸாவின் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 8 விமானத் தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.