பஸ் ஆசனமொன்றில் அமர்ந்து தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத வகையில் தாயும் குழந்தையும் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பதுளையிலிருந்து ககட்டரூப்ப சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்த இருவரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களாவர்.
பதுளை வெல்கொல்லையைச் சேர்ந்த டி.எம். சந்திராவதி (28 வயது) அமித்த மதுசங்க (2 வயது) ஆகிய இருவரே படுகாயமடைந்துள்ளனர்.
ககட்டரூப்ப என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ், முத்துமால என்ற இடத்தில் திரும்பும்போதே மேற்கண்ட இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இது குறித்து பதுளைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தனியார் பஸ் சாரதியையும் நடத்துநரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரின் நிலையும் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பஸ் சாரதியினதும் நடத்துநரினதும் கவனயீனமே இதற்கு காரணமென்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.