சர்வதேச மகளிர் தினத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும், அபிவிருத்திக்குமான அமைப்பு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் ஆலோசகருமான ஜனாபா சல்மா ஹம்ஷா தெரிவித்தார்.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கிடையில் 1000 சொற்களுக்கும் உட்பட்ட கட்டுரைப் போட்டியும் சிறுகதைப் போட்டியும் நடாத்தப்படவிருக்கிறது. சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் எனும் இரு தலைப்புகளில் கட்டுரைப் போட்டி இடம்பெறும்.
சிறுகதையானது பெண்களின் வாழ்வியலோடு தொடர்புபட்டதாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக கவிதை, சித்திரம் போன்ற போட்டிகளும் நடாத்தப்படவிருக்கின்றன. பெண்களின் சுதந்திரம், உரிமை, முன்னேற்றம் தொடர்பானதாகவும் கவிதைகள் 150 வரிகளுக்கு மேற்படாததாகவும் தெளிவாக எழுதி அனுப்பப்பட வேண்டும். சித்திரம் ஏ-4 தாளில் வரையப்படுவதுடன் சித்திரத்தின் கருத்து வெளிப்பாடு பெண்கள் தொடர்பானதாகவும் இருத்தல் அவசியமாகும்.
இவைதவிர இதே தலைப்புகளில் திறந்த போட்டிகளும் நடாத்தப்படவிருக்கின்றன. எனினும், கட்டுரைகள், சிறுகதைகள் 1500 சொற்களுக்கும் கவிதைகள் 200 வரிகளுக்கு உட்பட்டதாகவும் திறந்த போட்டிகளின் பொருட்டு வரையறை செய்யப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
பங்குபற்றும் போட்டியாளர்கள் தமது ஆக்கங்களை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு, இலக்கம் 22, ஊர்வீதி, காத்தான்குடி. எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.