* ஐ.தே.க மாற்றுக்குழு உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கார
"20 வருட காலமாக பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈடுபட்டு வருகின்றார். அவரது இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நாம் அவருடன் இணைந்து கொண்டோம்" என்று ஐ.தே.கட்சியின் மாற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான ஹேம குமார நாணயக்கார கூறினார்.
இரத்தினபுரி புதிய நகரில் 6 ஆவது ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுக்கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
அங்கு விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு, தொடர்ந்தும் உரையாற்றிய நாணயக்கார;
`கடந்த காலத்தில் தென்பகுதியில் மட்டுமே சிங்கக் (தேசிய) கொடி பறந்தது. தற்போது கிழக்கிலும் பறக்கின்றது. கூடிய விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியினால் வடக்கிலும் பறக்கும்.
வட,கிழக்கு பகுதியில் பிரபாகரனின் புலிக் கொடியே பறக்கவிடப்பட்டு வந்தது. ஜனாதிபதியால் அது முறியடிக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு இரு பிரதான கட்சிகளுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் ஐ.தே.க. தலைமைபீடம் தனியான வழியில் சென்றதனால் இந்த ஒப்பந்தம் கேள்விக்குறியானது. இதனால் ஐ.தே.கட்சியின் ஒரு பகுதியினரான நாம் தனியாக ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டோம். நாட்டு நலன் கருதியே நாம் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டோம்.
ரணில் கட்சியின் குறிப்பிட்ட சிலரின் கருத்துக்கே முன்னுரிமை கொடுப்பார். தனவந்த மற்றும் சுகமாக வாழ்ந்த, வாழும் மக்களுக்கே ஐ.தே.க. முன்னுரிமை வழங்கும். கிராமப் புற எளிய மக்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்காது. அவர்களின் கருத்துகளுக்கு செவிமடுக்காது.
வட, கிழக்கில், கிழக்கினை மீட்டபோது ரணில் கூறினார். கிழக்கு ஒரு காட்டுப்பகுதி என்றார். நகரமோ, காடோ அது எம்நாட்டுப் பூமி (தாய்நாடு) அதனை விட்டுக்கொடுக்க முடியுமா?
மாவிலாறினை மீட்டபோது கூட அதற்கெதிராக கருத்துத் தெரிவித்த ரணில் ஒரு நியாயமான தலைவராக மிளிர முடியாது" என்றார்.