* ஏழாலையில் சம்பவம்
ஏழாலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏழாலை மேற்கு - குப்பிளானைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயாரான லோகேஸ்வரன் - நிரோஜா (வயது-21) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
பிரஸ்தாப பெண்ணின் கணவர் கடந்த சிலமாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளால் பல இலட்சம் ரூபா செலவிட்டு வைத்தியம் செய்தும் நோய் குணமடையாத நிலையில், இறுதியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனளிக்காது என்று மருத்துவர்கள் கூறவே மனமுடைந்த நிலையில் இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று முன்தினம் அதிகாலை வேளை வீட்டில் எல்லோரும் தூக்கத்திலிருந்தபோது குறித்தபெண் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்ற வைத்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது, விழித்தெழுந்த வீட்டாரும் அயலவர்களும் உடனடியாக அவரைத் தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்து சென்று சேர்ப்பித்துள்ளனர். பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அன்று நண்பகல் அளவில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.