நாவலப்பிட்டி ரயில் நிலையப் பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் பயணிகளின் நலன் கருதி இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் புறப்படுவதற்கு முன்பு பொலிஸாரும் இராணுவத்தினரும் குறிப்பிட்ட தூரம் வரை சென்று ரயில் தண்டவாளங்களின் இருமருங்கையும் சோதனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ரயில் பயணி ஒருவர் தனது பொதி ஒன்றை ரயிலில் வைத்துவிட்டு நாவலப்பிட்டி நிலையத்தில் இறங்கியுள்ளார்.
பின்பு ரயில் புறப்பட்ட பின்பு பொதி பற்றி ஞாபகத்துக்கு வரவே குறிப்பிட்ட பயணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சந்தேகம் கொண்ட பொலிஸார் புறப்பட்டுச் சென்ற ரயிலை சேலம் பிரிஜ் பாலத்துக்கு அருகில் நிறுத்தி சோதனையிட்டபோது அந்தப் பொதியில் குறிப்பிட்ட பயணியின் உடுதுணிகள் இருந்துள்ளமை தெரியவந்தது.
ரயில் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பதற்றம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.