பெரட்டாசி பகுதியிலிருந்து புசல்லாவை பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த 4 பேர் புசல்லாவை வருகபிடிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் புசல்லாவை பகுதி நோக்கிச் சென்ற பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்த போது மண் திட்டில் மோதுண்டு வீதியின் நடுவே குடை சரிந்தது.
வீடன் தோட்டப் பகுதிக்கருகில் நடைபெற்ற இச்சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஜீ.சிகாமணி (வயது 55) பெரட்டாசி பீ.அண்ணாதுரை (வயது 39) பெரட்டாசி, என்.ஜீ.புஞ்சிபண்டா (வயது 57) ஸ்டெலன் பேர்க், கே.முத்துலிங்கம் (வயது 50) பூச்சிகொடை ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்மையில் இப்பகுதியில் தனியார் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த சமயம் பஸ் வண்டியினுள் 30 பயணிகள் வரை இருந்துள்ளனர். வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பஸ் பாய்ந்திருப்பின் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
இவ்வீதி குறுகியதாகவும் பழுதடைந்தும் காணப்படுவதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.