அண்மையில் உயர் நீதிமன்றம் ஒலிபெருக்கிப் பாவனை தொடர்பாக விதித்துள்ள உத்தரவின் படி ஒலிபெருக்கிக்கான பாவனை நேரம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், சிவராத்திரி தினத்தன்று இரவு 10 மணிக்குப் பின் மறுநாள் காலை 6 மணிவரை இந்து ஆலயங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதற்கென நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் இதற்கான அனுமதியை வழங்க சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை அகில இலங்கை இந்து மாமன்றம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று காலை மன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், உபதலைவர் சின்னத்துரை தனபாலா ஆகியோர் சட்டப்பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காமினி திஸ்ஸநாயக்காவைச் சந்தித்து இவ்வனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர்.
சகல இந்து ஆலய தர்ம கர்த்தாக்களும் உடனடியாக இது தொடர்பாக பொலிஸாரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாமெனவும் ஏதாவது பிரச்சினை இருப்பின் தன்னுடன் 0112435271, 0714432456 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் காமினி திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.