* அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
மலையக மக்களின் வாழ்க்கை முறையினை மாற்றியமைக்கும் நோக்கோடு இன்று ஆரம்பிக்கும் வீடமைப்புத் திட்டம் நவீன கிராம மாதிரியாகும். இதன் மூலம் எதிர்கால மக்களினுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு இப்பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே மலையகத்தின் அனைத்து பாகங்களிலும் இதனை வியாபிக்கச் செய்ய முடியும் இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் பொருளாதார ஏற்றதாழ்வுகள் அகற்றல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையகத்தில் நவீன கிராமமும் தனித்தனி வீடுகளை 2 இலட்சம் ரூபாவுக்கு அமைப்பதற்கான ஆரம்ப வைபவம் கொட்டகலை ஸ்போனிகிளிப் தோட்டத்தில் 43 தனித்தனி வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் இடம் பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கென அரசாங்கம் 630 இலட்சம் ரூபாவை முதற் கட்டமாக இளைஞர் வலுவூட்டல் அமைச்சிற்கு வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தோட்டப்புற மக்களிடையே வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற நல்ல நோக்குடனும் அதேகண் இந்த வீடமைப்புத் திட்டத்தில் வசிப்போருக்கு சுய தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கோடும் மலையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நவீன கிராமத் திட்டத்தின் முதற்படியாக இனறு ஸ்போனி கிளிப் தோட்டத்தில் தனித்தனி வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட வீடுகளைப் போல் அல்லாமல் வரவேற்பறை, இரண்டு படுக்கையறை, சமயலறை, சாப்பாட்டு அறை, ஆயுதங்களை வைப்பதற்கான அறை போன்ற வசதிகளுடன் கூடிய வகையில் இவ்வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்காக 10 பேர்ச்சஸ் அளவில் காணியும் வழங்கப்படவுள்ளது. வீடமைப்புத் திட்டத்திற்கு தேவையான கற்களை தயரிக்கும் பொறுப்பும் இப்பிரதேச மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலுள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.
ஒவ்வொரு வீட்டுக்குமான செலவு சுமார் 7 1/2 இலட்சமாகும். 3 இலட்சம் ரூபாய் வட்டியில்லா கடனும் மிகுதி 4 1/2 இலட்சம் ரூபா அமைச்சினூடாகவும் வழங்கப்படவுள்ளது. உங்களுடைய பங்களிப்பு கூடுதலாகக் கிடைக்கும் பட்சத்தில் வீடுகளுக்கு தேவையான ஏனைய பொருட்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுய தொழிலில் ஈடுபடுவதற்கான கடைத் தொகுதிகளும் அளந்துக் கொடுக்கப்படும், கால்நடை வளர்ப்புக்கான பொதுவான பண்ணையொன்றும் உள்ளது.
அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மாதிரி தற்போது தோட்டத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றங்களைச் செய்ய வேண்டுமாயின் உடனடியாக எமக்கு அறிவிக்க வேண்டும்.
மக்களின் பூரண ஒத்துழைப்பு இத்திட்டத்திற்குக் கிடைக்கும் பட்சத்தில் பணத்தினை மீதப்படுத்தி ஏனைய தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்த முடியும். ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை மாற்றமடைய வேண்டும். சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் வேலை வாய்ப்பு என்பவற்றை முன்னிலைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நவீன கிராமியத் திட்டத்திற்கு வெற்றி கிடைப்பது உங்களின் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது. முதன் முதலாக கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் மலையகத்தின் அனைத்து பாகங்களுக்கும் சென்றடைவது நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது. என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் யோகராஜன், இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அனுஷியா சிவராஜா, பாலச்சந்திரன், அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர் நகுலேஸ்வரன் , அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.