*20 பேர் பலி; பங்களாதேஷ்,மியன்மார் நாட்டவர்கள்
கிழக்கு கடற்பரப்புக்கு அப்பால் கடந்த இருவாரங்களாக மரப்படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 71 மியன்மார் மற்றும் பங்களாதேஷ் சட்டவிரோதகுடியேற்றவாசிகளை இலங்கை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.
கிழக்கே முல்லைத்தீவு கரையிலிருந்து சுமார் 150 கடல்மைல் தூரத்தில் வைத்தே நேற்றுக் காலை இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் கிழக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகொன்றின் நடமாட்டம் தென்படுவதாக கடற் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து கடற்படை பீரங்கிப் படகுகள் சில உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று நோட்டமிட்டபோது, இழுவைப் படகையொத்த படகொன்று கடல் நீரில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்துள்ளனர்.
அந்தப் படகை நோக்கிச் சென்ற கடற்படையினர் அதனை நெருங்கிய போது அதிலிருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு குரலெழுப்பியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு மேலுமிரு படகுகளை வரவழைத்த கடற்படையினர்,பழுதடைந்த அந்தப் படகிலிருந்த 71 பேரையும் கடற்படை படகுகளில் ஏற்றியதுடன் பழுதடைந்த அவர்களது படகையும் கட்டியிழுத்துக் கொண்டு திருகோணமலை கடற்படைத்தளத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன் போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாவது;
மியான்மாரில் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட, இழுவைப் படகுபோன்ற படகொன்றில் கடந்த மாதம் 9 ஆம் திகதி 67 பேருடன் மியன்மாரிலிருந்து இந்தப் படகு புறப்பட்டுள்ளது.
அங்கிருந்து பங்களாதேஷ் சென்ற இந்தப் படகு அங்கு வைத்து 24 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் மலேசியாவில் குடியேறும் நோக்கிலேயே 91 பேரும் இந்தப் படகு மூலம் சட்டவிரோதப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
தங்கள் பயணத்திற்கேற்ப உணவையம் குடிநீரையும் இவர்கள் இந்தப் படகில் எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் கடந்த 20 ஆம் திகதி படகில் இயந்திரக் கோளாறு ஏற்படவே அது செயலிழந்துவிட்டது. இயந்திரக் கோளாறை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து அந்தப் படகு கடல் நீரோட்டத்திற்கேற்ப அலைகளில் இழுபட்டுச் சென்றுள்ளது.
இவ்வேளையில் படகிலிருந்த உணவுப் பொருட்களும் குடிநீரும் முடிவடையவே பட்டினியாலும் உடல் வறட்சி காரணமாகவும் 17 மியன்மார்காரர்களும் மூன்று பங்களாதேஷ் வாசிகளும் உயிரிழக்கவே அவர்களது சடலங்களை அவர்கள் கடலுக்குள் வீசியுள்ளனர்.
ஏனையவர்களும் பசியாலும் குடிநீரின்றியும் மயக்கமுறும் நிலைக்குச் சென்றவேளையிலேயே இந்தப் படகு இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கு அலைகளால் இழுத்துவரப்பட்ட நிலையில் நேற்றுக் காலை இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
உடனடியாகவே இவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்பட்டதுடன் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மியன்மார் மற்றும் பங்களாதேஷ் தூதரகங்களுக்கு அறிவித்துமுள்ளனர்.
அடுத்த சில தினங்களில் இவர்கள் அனைவரும் தத்தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.