*வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் சம்பவம்
டிட்டோகுகன்
கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுப் புரளியால் ரயிலில் இருந்த மக்கள் பதற்றத்தில் குதித்து ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை ரயில் நிலைய அதிகாரி ஒருவரும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மாலை 5.20 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
கொழும்பிலிருந்து வாதுவ சென்றுகொண்டிருந்த ரயில் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் தரித்துநின்ற போதே இந்த குண்டுப் புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரயிலில் இருந்த பயணிகள், ரயிலை விட்டு குதித்து பாதுகாப்பு தேடி சிதறி ஓடியுள்ளனர்.
நாளாந்த பணிகள் முடிவடைந்து வீடுகளுக்கு திரும்புவோரும் அந்த ரயிலில் இருந்துள்ளதுடன், பெரும்பாலானோர் பாதுகாப்பு தேடி ரயில் நிலைய கட்டிடத்துக்குள் புகுந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பதற்றத்தில் அவசர அவசரமாக இறங்கி ஓடியதில் பெண்மணியொருவரின் காலில் சிறிய முறிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும், இறுதியில் ரயிலில் குண்டுகள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டதன் பின்னர் சில நிமிட தாமத்தின் பின்னர் ரயில் தனது பயணத்தை தொடர்ந்ததாகவும் கூறப்பட்டது.