இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்க்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியையும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தியாவுக்கு ஆறுநாள் விஜயமொன்றை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ள லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று ஐம்மு-காஷ்மீர் பகுதிக்குச் சென்றார்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஷ்ரீநகருக்குச் சென்ற இவரை வரவேற்ற இந்திய இராணுவ அதிகாரிகள், அவரை இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோடு உள்ள தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று அதனைக் காண்பித்ததுடன் அங்குள்ள நிலைமைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.
இதன் பின் புதுடில்லி திரும்பிய லெப்.ஜெனரல் பொன்சேகா இன்று அங்கு மிக முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
இன்று அவர் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, இராணுவத்தளபதி ஜெனரல் தீபக் கபூர், கடற்படைத்தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா மற்றும் விமானப் படைத்தளபதி எயார் சீங் மாஷல் பாலிஹொமி மேஜரையும் சந்தித்து இலங்கை நிலைமைகள் குறித்தும் இரு தரப்பு உறவுகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்.
தனது இந்த விஜயத்தின் போது இலங்கை இராணுவத் தளபதி தீவிரவாத செயற்பாடுகளுக்கெதிராக இந்தியப் படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் மிஷோராம் பகுதிக்கும் காடுகளில் இடம்பெறும் போர் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளும் காமாண்டோ பயிற்சிகளும் வழங்கப்படும் கர்நாடகாவின் பெல்காம் பகுதிக்கும் செல்லவுள்ளார்.
அவரது இந்த விஜயமானது இரு நாடுகளினதும் இராணுவத்தினருக்குமிடையில் சிறந்த உறவுகளை வளக்குமொரு நடவடிக்கையென இந்திய இராணுவதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது இலங்கை இராணுவத் தளபதி மத்தியபிரதேசத்தின் மகோ பகுதியிலுள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கும் சென்று அதன் கட்டளைத் தளபதியான லெப்.ஜெனரல் கே.எஸ்.யாதவ்வையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் அவர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கும் பீகாரிலுள்ள புத்த காயாவுக்கும் செல்லவுள்ளார்.