* `வெளிமட்ட கட்டமைப்பில் நம்பிக்கை இல்லை' மனித உரிமை பேரவை அமர்வில் அமைச்சர் சமரசிங்க
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 7 ஆவது அமர்வு ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், இலங்கை, கொங்கோ, மியான்மார் தொடர்பாக தனது நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை நிலைவரம் மோசமடைந்து வருவது தொடர்பான பல அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கவனத்தை ஈர்க்குமென கருதப்படும் சூழ்நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் (Human rights Watch) இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது.
பலவந்தமாக காணாமற் போதல் தொடர்பாக செயற்குழுவின் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் `காணாமல் போதல்' தொடர்பாக உலகிலேயே அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இலங்கை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் சித்திரவதைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் இலங்கை தொடர்பான தனது 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுயாதீன நிபுணர்கள் பலரின் கணிப்பீடுகள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் மதிப்பீடு என்பன இலங்கையில் ஐ.நா. வின் கண்காணிப்பு அலுவலகம் அவசரமாக தேவையென வலியுறுத்தியுள்ளன.
சோமாலியா, மியான்மார், இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் மோசமான சூழ்நிலையில் இதனை நிவர்த்தி செய்வதற்கான தனித்துவமான பொறுப்பு ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு உள்ளது என்றும் இல்லாவிடின் உலகளாவிய மனித உரிமை நெருக்கடிகள் தொடர்பாக மனித உரிமை பேரவையானது அலட்சியம் செய்வதாக அர்த்தப்படுமெனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த டி.ரி.வேரோ கூறியுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜனநாயக ரீதியிலான கட்டமைப்பு முறையினை புறந்தள்ளிவிடக்கூடிய வெளிமட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென விடுக்கப்படும் வலியுறுத்தல்களில் இலங்கை நம்பிக்கை கொள்ளவில்லையெனவும் மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நாடுகளின் தேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உதவியும் அனுசரணை வழங்குவதாகவுமே இருக்க வேண்டும் என்றும் இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று திங்கட்கிழமை கொழும்பின் நிலைப்பாடு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஏழாவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நாசூக்காகக் கூறியுள்ளார்.
நம்பிக்கை, மற்றும் தமது தேவைகள், முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே அரசாங்கங்கள் மனித உரிமைப் பேரவையிடம் தத்தமது தேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக உதவியை நாடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் மகிந்த சமரசிங்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
"பிரிவினைவாத பயங்கரவாதத்தால் ஆயுதமோதல் எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதமானது இணக்கப்பாடின்மை, துன்பம், எமது மக்கள் மத்தியில் ஐக்கியமின்மை என்பனவற்றையும் நாட்டை துண்டாக்குவதற்குமான விதைகளை விதைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளால் 3,830 மீறல் சம்பவங்கள் யுத்தநிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆதலால் இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியான அனுகூலத்தை அடைவதற்கு பயங்கரவாதத்தை பயன்படுத்துவதை உறுதியாக எதிர்ப்பதென்ற தீர்மானத்தில் திடமாக நிற்கிறது. இதேயளவுக்கு எமது இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாப்பதிலும் நாம் பற்றுறுதியாக உள்ளோம். அதேசமயம், சகலரினதும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் பற்றுறுதியுடன் இருக்கின்றோம்.
இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. ஆனால், எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பயங்கரவாதம் வழிமுறையல்ல.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாம் தொடர்வதுடன் அதேசமயம், சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். இந்தத் தீர்வானது சமூக சமத்துவம் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதாக மட்டுமல்லாது அதிகாரப் பங்கீடு மூலம் சகல பிரஜைகளையுமே அரசாங்கத்துடன் நெருங்கிவரச் செய்வதாக அமைய வேண்டும். இதனடிப்படையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளின் ஓரங்கமாக 175 தமிழர்கள் பொலிஸ் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் பெண்களாவர். கிழக்கில் மேலும் 400 பொலிஸ் அதிகாரிகளைச் சேர்க்க உள்ளோம். இது பொலிஸ் அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கும் நடவடிக்கையாகும்.
மனிதஉரிமைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்த நாம் ஆயத்தமாக உள்ளோம். மனித உரிமை விவகாரத்தில் நாம் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்து வருகின்றோம். ஐ.நா. வின் விசேட நடைமுறைகளுடன் எம்மைத் தொடர்ந்தும் ஈடுபடுத்திவருகின்றோம். இதயசுத்தியுடனான நண்பர்கள், நலன்விரும்பிகளிடமிருந்து நல்ல முறையில் வெளிப்படுத்தப்படும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாம் என்று நாம் ஒருபோதும் எண்ணவில்லை.
ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமது பிரசாரத்தில் வெற்றியடைவதற்காகவும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு எம்மை பலவீனமானவர்களாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் வரவேற்கவில்லை
மனித உரிமைகள் தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச ரீதியில் பிரபல்யம் வாய்ந்தோரை உள்ளடக்கிய சுயாதீனக் குழு போன்றவை மனித உரிமை விவகாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவையாகும். அத்துடன், உரிமைகள் தொடர்பான புதிய அரசியலமைப்புச் சட்டமூல வரைபுகளுக்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
அதேசமயம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது மனித உரிமை மீறல்கள் தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு ஏற்புடையதாக அண்மையில் விசாரணை ஆணைக்குழு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். பட்டினிக்கு எதிரான இயக்கத்தின் 17 பணியாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடையும் தறுவாயிலுள்ளன.
திருமலையில் 5 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டது தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்வதற்கு சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதால் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதலால் அரச படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிட்ட நலன் சார்ந்தவையும் முதிர்ச்சியற்றவையுமாகும்.
பல்லின, பல்கலாசார, பலமத, பலமொழி மக்கள் வாழும் நாட்டில் சகல சமூகங்களினதும் அடிப்படைச் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதே எமது இலக்காகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த இலக்கை எட்டுவதற்கு எமது சகல சர்வதேச பங்காளிகளும் உதவியளிப்பார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்".