சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை இன்னொரு சர்ச்சை தவிர்க்கப்பட்டது.
சச்சின் 99 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மிகவும் பதற்றமாக இருந்தார். இப்போது புயல் வேக பந்து வீச்சாளர் பிரட் லீ வீசிய பந்து (பீமர் வகை), சச்சின் ஹெல்மெட்டில் பட்டு அவரது இடது தோள்பகுதியை தாக்கிச் சென்றது. நல்லவேளை காயம் எதுவும் ஏற்படவில்லை. உடனே ஓடி வந்த பிரட் லீ, சச்சினிடம் `ஸொரி' கேட்டார். இதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்ட அவரும் கைகுலுக்கி நிலைமையை சமாளித்தார்.
இதுபற்றி நடுவர்கள் கப்டன் பொண்டிங்கிடம் விசாரித்தனர். அப்போது, பனியின் காரணமாக பந்து ஈரப்பதமாக இருந்தது. இதனால் பிரட் லீ கையிலிருந்து பந்து நழுவிவிட்டது எனப் பதிலளித்தார்.
கிரிக்கெட்டில் `பீமர்' முறையில் வீசும் போது, பந்து துடுப்பாட்ட வீரரின் தலைப்பகுதியை நோக்கிச் செல்லும். இதனால் வீரர்கள் காயமடைய அதிக வாய்ப்புண்டு. இது விதிமுறை 42.6 இன் கீழ் தவறு. இப்படி வீசினால் நோபோல் கூறப்படும். இந்நிலையில் பிரட் லீ வீசிய `பீமர்' பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை.
இதுபற்றி சச்சின் கூறுகையில்; "எனக்கு பிரட் லீயை நன்கு தெரியும். அவர் வேண்டுமென்றே அப்படி பந்துவீச வாய்ப்பில்லை. எனது மகன் அவரது ரசிகன். எனவே ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க பிரட்லீ இந்தியா வரும் போது, இதேபோன்ற பீமரை எனது மகனிடம் இருந்து சந்திக்க வேண்டியிருக்கும் என ஜாலியாக குறிப்பிட்டேன்" என்றார்.
இந்தியாவுக்கு நேற்று முன்தினம் `சுப்ப சண்டே' என்று தான் சொல்ல வேண்டும். அவுஸ்திரேலிய மண்ணில் நடந்த இறுதியாட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் சச்சின் முதல் முறையாக சதம் அடித்தார். இப்படி இந்திய சிரேஷ்ட அணியினர் அசத்தினார்கள் என்றால், ஜூனியர்கள் ஒருபடி மேலே போய் உலகக் கிண்ணத்தை வென்று சாதித்தனர்.
சச்சின் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் இறுதியாட்டத்தில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 1998-99 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சிம்பாப்வேக்கு எதிரான இறுதியாட்டத்தில் சதம் அடித்துள்ளார்.
இவர், இந்தியா சேஸ் செய்த போட்டிகளில் இதுவரை 16 முறை சதம் அடித்துள்ளார். இதில் இந்தியா 14 முறை வென்றுள்ளது. 2 போட்டிகளில் இவர் சதம் அடித்தும் பரிதாபமாக தோற்கும் நிலையேற்பட்டது.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 39 போட்டியில் விளையாடியுள்ள சச்சின் நேற்று முன்தினம் தான் முதன் முறையாக சதம் அடித்தார்.
சிட்னியில் நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடந்த 11 போட்டியிலும் இந்தியா தேல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.