`அவுஸ்திரேலியாவில் நடந்துவரும் முக்கோண கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இலங்கை அணி பந்து வீசுகையில் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அணிக் கப்டன் மஹேல ஜெயவர்தனாவிற்கு போட்டிக் கட்டணத்தில் 10 சதவீத அபராதத்தை ஐ.சி.சி.நடுவர் ஜெவ் குரோவ் விதித்துள்ளார். மற்ற வீரர்களுக்கு 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கோண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இறுதிப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு கைவிரல் காயமேற்பட்டு வீங்கியிருக்கிறது. அவர் வலியால் துடித்து வருகிறார். அவருக்கு `எக்ஸ்ரே' எடுத்துப் பார்க்கப்பட்டது. காயம் பயப்படும் வகையில் இல்லையென்று அணி முகாமையாளர் பிமால் சோனி தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் நடந்து வரும் லினாரஸ் செஸ் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 10 ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஆனந்த், நோர்வே வீரர் மாக்னஸ் சார்ல்செனுடன் மோதினார். இந்த ஆட்டம் 22 ஆவது காய் நகர்த்தலுக்குப் பின் டிராவில் முடிந்தது. ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இறுதிப் போட்டியில் 66 ஓட்டங்கள் குவித்த நடுவரிசை வீரர் ரோகித் ஷர்மா பின்னர் கூறுகையில்;
`சச்சின் டெண்டுல்கர் எனக்கு முன்மாதிரி வீரராவார். அவருடன் இணைந்து நீண்ட நேரம் ஆடியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது. எனது சிறந்த ஒருநாள் போட்டி இனிங்ஸ் இதுவாகும்' என்றார்.