தென். ஆபிரிக்க - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இனிங்ஸாலும் 225 ஓட்டங்களாலும் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி, போட்டித் தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
தென் ஆபிரிக்கா - பங்களாதேஷ் அணிகளிடையேயான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் நடைபெற்றது.
முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 583 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான நீல்மெக்கன்சி (226 ஓட்டங்கள்), கப்டன் ஸ்மித் (232 ஓட்டங்கள்) ஆகியோர் உலக சாதனை படைத்தனர்.
பின்னர், முதல் இனிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் அணி 2 ஆவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஷாரியர் நபீஸ் 7 ஓட்டத்துடனும், அப்துர் ரசாக் 8 ஓட்டத்துடனும் களத்திலிருந்தினர்.
ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி தேநீர் இடைவேளைக்குப் பின் 259 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பாலோ - ஒன் ஆனது. இதைத் தொடர்ந்து 2 ஆவது இனிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களை எடுத்திருந்தது. முஷிபுர் ரஹிம் 4 ஓட்டத்துடனும், அப்துர் ரசாக் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் களத்திலிருந்தனர்.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் பங்களாதேஷ் அணி மோசமாகவே ஆடியது. மேலும், 55 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மிகுதி 5 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று இனிங்ஸாலும் 225 ஓட்டங்களாலும் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் ரொபின் பீற்றர்சன்-05, ஸ்ரைன் - 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக தென் ஆபிரிக்க கப்டன் கிரேமி ஸ்மித்தும் ஆட்டத் தொடர் நாயகனாக தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர் ஸ்ரையினும் தெரிவு செய்யப்பட்டனர்.