வ.திருநாவுக்கரசு
ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஷ்ரீ.ல.சு.க.) காலங்காலமாக நடத்திவந்ததாகிய ஏட்டிக்குப் போட்டி அரசியல் கலாசாரத்திற்கு விடை கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகஎனப் பறைசாற்றி 2006 ஒக்டோபரில் 2 கட்சிகளும் செய்துகொண்ட `வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்' அதன் மை காயுமுன் காற்றில் பறக்க விடப்பட்டதை மக்கள் மறந்திருக்க முடியாது. அண்மையில், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவப்படம் பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டபோது சந்தித்த வேளையில் ஜனாதிபதி ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்திருந்த அழைப்பின்பேரில் இரு `பிரதான' கட்சிகளின் தலைவர்கள் எனும் தோரணையில் 26.02.08 ஆம் திகதி அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்ததை யாரும் அறிவர்.
13 ஆவது திருத்தம் அமுல் நடத்துவதற்கு தனது அரசாங்கம் தலைப்பட்டிருப்பது பற்றி ஐ.தே.க. என்ன அபிப்பிராயத்தினைக் கொண்டுள்ளதென ஜனாதிபதி ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியபோது அது ஏற்கனவே சட்டப் புத்தகத்தில் இருந்து வருவதால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தமக்கு எதுவித பிரச்சினையும் இல்லையென விக்ரமசிங்க கூறினார். 13 ஆவது திருத்தம் அமுல் நடத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லையென ஜே.வி.பி. மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நிலையில் தனக்குமே அது விருப்பமற்ற காரியமென்ற படியால் அதனை எப்படி நழுவ விட்டுவிடலாமென ஜனாதிபதி ராஜபக்ஷ எண்ணினார் போலும். ஏனென்றால், ஐ.தே.க. பொதுச் செயலாளார் திஸ்ஸ அத்தநாயக்க தன் மீது இது விடயமாக வசைபாடித்திரிவதாக ராஜபக்ஷ விக்ரமசிங்கவிடம் முறையிட்டார். "13 ஆவது திருத்தத்தினை முன்னர் கடுமையாக எதிர்த்த ஒருவர் இப்போது அதனை நடைமுறைப்படுத்த முன்வருவாரா என்ற சந்தேகத்தையே அத்தநாயக்க திசைதிருப்பியுள்ளார் என விக்கிரமசிங்க கூறவே, சற்று ஆத்திரமடைந்த நிலையில் "13 ஆவது திருத்தத்தினை அன்று எதிர்த்தது போல் இன்றும் கூட எதிர்க்கின்றேன். ஆனால், சர்வகட்சி பிரதிநிதிகள் குழு என் மீது பிரயோகித்த அழுத்தம் காரணமாகவே இதற்கு நான் உடன்பட வேண்டியதாயிற்று. பிரபாகரன் கொல்லப்படவேண்டும். அல்லாவிட்டால் இதொன்றும் சரிவரப்போவதில்லை" என்றெல்லாம் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார். கிழக்கை மீட்டது போல் வடக்கையும் மீட்டே தீருவோம். எதுவிதத் தடைகளையும் துடைத்தெறிந்து விடுவோம். பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும். பேச்சுவார்த்தைகளில் எதுவித பயனுமில்லை. யுத்தம்தான் தீர்வு. தமிழ், சிங்கள, முஸ்லிம், இந்து, பௌத்த, இஸ்லாமிய அணைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவே யுத்தம் நடத்தப்படவேண்டியுள்ளது. இவ்வாறெல்லாம் சென்ற ஞாயிறு இரத்தினபுரியில் நடைபெற்றபோது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தனதுரையில் கூறியுள்ளார்.
முன்னர் NDTV தொலைக்காட்சி செவ்வியில் கூறிய விடயம்
சென்ற ஜனவரியில் `இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழின் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு வழங்கியிருந்த NDTV `வோக் த டோக்' (Walk the talk) தொலைக்காட்சிப் பேட்டியில் பிரபாகரனை உயிரோடுபிடித்து இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருந்தார். ஆயினும், பிரபாகரன் கொல்லப்படவேண்டுமென்றே ராஜபக்ஷ இப்போது கூறுகின்றார். ஆக யுத்தமானது காலவரையரையின்றி மிகத் தீவிரமாக நடத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடகவுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையில் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பேணி எல்லா இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வே அவசியமாகுமென்பதால் அதனையே தாம் ஆதரிக்க முடியுமென இந்திய ஆட்சியாளர் வாய்ப்பாடாகக் கூறிவருவதுண்டு. அண்மையில் ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இந்திய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அதனை வலியுறுத்தித்திய அதேவேளை இராணுவத்தீர்வு ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளார். அதுபோலவே குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இராணுவத்தீர்வு அன்றி அரசியல் தீர்வை நோக்கி நகர்வதே இலங்கை அரசாங்கத்தின் தெரிவாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. APRC மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டமுடியுமென அந்த நாடுகள் ஒருவேளை எண்ணக்கூடும். ஆனால் APRC ஐ ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு கவசமாகவே பாவித்து வருகிறது என்பதுதான் யதார்த்தமாயிருக்கின்றது. இதனை அந்நாடுகள் கூர்ந்து கவனிக்க வேண்டுமே ஒழிய பிரச்சினையை மேலோட்டமாக நோக்குவது தவறாகும். யுத்தம் தீர்வாக முடியாதென எவ்வளவு தான் சர்வதேச சமூகம் அறிவுறுத்தி வருகின்றதாயினும் இலங்கை அரசாங்கம் அவற்றையெல்லாம் புறந்தள்ளி வருவதையிட்டு சர்வதேச சமூகம் பாராமுகமாய் இருக்கக் கூடாது.
இராணுவத் தளபதி ஆறு நாள் இந்திய விஜயம்
இராணுவத் தளபதி லெப்ட். ஜெனரல் சரத் பொன்சேகா 6 நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இந்திய முப்படைத் தளபதிகளை நேற்று சந்திக்க ஏற்பாடாய் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதி அடங்கலாக சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மையங்களையும் அவர் பார்வையிடும் நிகழ்ச்சி நிரலைக் காணமுடிகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ தீர்வு ஏற்புடையதல்ல என மிக அண்மையில் தான் ஜனாதிபதி பட்டேல் கூறி வைத்ததைப் பார்த்தோம். மேலும் இதில் இந்தியா உறுதியாக இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் இந்திய பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை அழிக்காமல் அல்லது பலவீனப்படுத்தாமல் அரசியல் தீர்வு காண்பது சாத்தியமற்றது என்பதால் இதற்கான நடவடிக்கை காலம் தாழ்த்தக் கூடியது அல்ல என ஜெனரல் பொன்சேகா இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதுடன் அதற்கு இந்தியா கைகொடுக்க வேண்டும்.
யுத்தம் புலிகளுக்கு எதிரானதேயொழிய தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றெல்லாம் எடுத்துக் கூறக்கூடும். அதற்கான பிரதிபலன் எப்படியிருக்கும் என்பதை கூறுவதற்கில்லை. இதனிடையில் ரஷ்ய அர சாங்கம் 500 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கையிலும் கொசோவோ போன்றதொரு நிலை உருவாக இடமளித்து விட முடியாதென இலங்கை அரசாங்கம் ரஷ்ய அதிகாரிகளிடம் கோடிட்டுக் காட்டி வழங்கல்களை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் எண்ணுவது போல் இராணுவத்தீர்வு சாத்தியப்படக்கூடியதல்ல என்பது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான அழிவுகளும் பாரிய பொருளாதார வீழ்ச்சி , கட்டுக்கடங்காத பணவீக்கம் , குறைந்தது 50% மக்களால் தாங்கவே முடியாத வாழ்க்கைச் செலவுப்பழு போன்ற கேடுகள் விளைவதையே எதிர்பார்க்க முடியும்.
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் கேட்டவை
இலங்கைப் பிரச்சினை அண்மையில் பிரித்தானிய பிரபுக்கள் (மேல்) சபையில் விவாதிக்கப்பட்ட போது அமைச்சர் மல்லொக் பிறவுண் இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைத்து இலங்கை அரசாங்கம் காய்களை நகர்த்துவது அபாயகரமானதால் அதனைத் தவிர்த்து முழுமையான அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
மல்லொக் சற்று விபரமாக கூறிவைத்ததைப் பார்ப்போம்" 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்துவது ஒரு முதல் படியாகும். ஆனால், எல்லா சமூகங்களினதும் அபிலாசைகளைத் திருப்திப் படுத்தக்கூடிய விதத்தில் APRC புதிய ஏற்பாடுகளை நோக்கிப் பயணிக்க வேண்டும். எமது அடிப்படையான கவலை யாதெனில் APRC மூலமோ வேறு எந்த வழிமுறை மூலமோ பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் போதியளவு ஆக்கபூர்வமான அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதாகும்.
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராகவுள்ளதென இங்கு யாரும் எண்ணினால் அது தவறாகும். இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைப்பது ஆபத்து நிறைந்தது என்பதால் இலங்கை அரசாங்கம் முழுமனதாக அரசியல் தீர்வு முயற்சியில் இறங்க வேண்டுமென நாம் அழுத்தம் கொடுப்போம்" இவ்வாறு தான் மல்லொக் கூறியுள்ளார்.
இங்கே நாம் இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் நடத்தப்படும் என்பது சாத்தியமற்றதாகும். ஆனால் வெறுமனே இது ஒரு கண்துடைப்பென பலர் நம்புவதாக அரசியலமைப்பு நிபுணரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் கூறியுள்ளார். ஜயம்பதி விக்ரமரத்ன 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தினை APRC யின் ஆலோசனையாகச் சமர்ப்பிக்கப்பட்ட சூழ்நிலை தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். அதன் காரணமாக அவர் அரசியலமைச்சின் ஆலோசகர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 13 ஆவது திருத்தத்தை அமுல் நடத்துவதில் அரசாங்கம் நேர்மையாயிருக்குமாயின் மகாணசபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகிய கமநல சேவைகள் முன்னர் மத்திய அரசாங்கத்தால் சட்டத்திற்குப் புறம்பாகப் பொறுப்பேற்கப்பட்டதால் அந்த விடயத்தை மாகாண சபைகளிடம் மீள அளிப்பதற்கு முன் வரவேண்டுமென விக்ரமரத்ன சவால் விட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் அவற்றின் சம்மதமின்றி மத்திய அரசாங்கம் 2/3 பெரும்பான்மையுடன் சட்டம் கொண்டு வரமுடியும் என்பதையும், தேசிய கொள்கை வகுத்தல் என்ற போர்வையில் சுற்றிவளைத்து மாகாண சபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமியற்ற முடியும் என்பதையும் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மல்பொக் பிறவுண் கூறியது போலவே APRC யின் முயற்சி போதியளவு காத்திரமானதாயில்லை என்பது ஒரு புறம் மறுபுறத்தில் எவ்வளவு தான் காத்திரமான அரசியல் தீர்வுத்திட்டத்தை APRC தயாரித்து முன்வைத்தாலும் அது முடக்கப்படமாட்டாது என்பதற்கு உத்தரவாதமில்லை.
எனவே நாட்டுநலன்களை மேலும் குழிதோன்டிப் புதைப் பதற்கு வழி சமைப்பதை விடுத்து, நாட்டை புனர்நிர்மாணம் செய்வது எப்படி, பிளவுண்டிருக்கும் நாட்டை ஒறுமைப்படுத்துவது எப்படி என்றெண்ணி செயற்படுவது அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.அனைத்து மக்களையும் அரசாங்கம் அரவணைத்துச் செயற்படத் தலைப்பட்டால் பேரினவாத தடைக்கற்களை உடைத்தெறிய முடியும். அதுதான் சமதானத்திற்கான திசை வழியாகும்.