முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
(நேற்றைய தொடர்ச்சி)
வர்த்தக நிறுவனங்களில் உள்ள பணியாட்களின் சராசரி எண்ணிக்கை அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கூடுதலாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், இவ்விடயம் குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் விடையளித்தவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. அம்பாறையில் சராசரிப் பணியாளர்களின் அளவு 19 சதவீதமாகக வீழ்ச்சியடைந்தது.இது குறித்து திருகோணமலை மாவட்டம் 56 சதவீதமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளது. அம்பாறையிலும் திருகோணமலையிலும் சராசரிப் பணியாட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி (முறையே - 19%, -56%) வாடிக்கையாளர்களின் சராசரி எண்ணிக்கையின் வீழ்ச்சியினை (முறையே 5%, 33%) விட உயர்ந்ததாக இருந்துள்ளது. எப்படியாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாடிக்கையாளர்களின் நாளாந்த சராசரி எண்ணிக்கை 13 சதவீதமாக வீழ்ச்சியைக் காட்டியுள்ள பொழுதிலும், பணியாட்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
மேலே குறிப்பிட்ட முடிவுகள் காட்டுவது, அம்பாறையிலும் திருகோணமலையிலும் தேவைப்பட்டதற்கு மேலாக வர்த்தகர்கள் பணியாளர்களை நீக்கியுள்ளதாகத் தெரிகின்றது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தகர்கள் எந்தப் பணியாட்களையும் நீக்கவில்லை என்பதும் தெரிகின்றது. இவ்வாறான வேறுபட்ட விதமான வர்த்தகர்களின் நடத்தை அம்பாறையிலும் திருகோணமலையிலும் வர்த்தகர்கள் தற்போதுள்ள நிலைமை மாற்றமடையும் என்பது பற்றி குறைவான நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்பட்டுள்ளனர் என்பதைப் பிரதிபலித்துள்ளது. இதற்கு மாறாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தர்கள் நிலைமையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பியுள்ளனர் என்ற காரணத்தினால் பணியாட்களை நீக்கவில்லை எனக்கருத இடமுண்டு.
3.4. சந்தை வாய்ப்புப் பெறுதல்
பொருள்களை விற்பனை/கொள்வனவு செய்தல், உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்பவை தொடர்பான சந்தைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு பிரச்சினைகளை கமக்காரர்கள், மீன்பிடியாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் ஆகியோர் எல்லா மாவட்டங்களிலும் மட்டக்களப்பில் உள் மீன்பிடியாளர்கள் நீங்கலாக எதிர்நோக்கியுள்ளனர். சோதனையிடுவத்கு தடை முகாம்கள் பல பிரதான பாதைகளிலும் சிறிய பாதைகளிலும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மகாணத்திற்கு உள்ளேயும் கொழும்புக்கும் மற்றைய இடங்களுக்கும் பொருட்களை எடுத்துச் செல்லுதல் குறித்த கட்டுப்படுத்தல்கள் இருந்துள்ளன. மேலும், பொருட்களை பாதுகாப்புத் தடைமுகாம்களில் வாகனங்களிலிருந்து இறக்குவதும் ஏற்றுவதும் செய்ய வேண்டியதனால், குறிப்பாக இலகுவில் அழிந்து போகக் கூடிய மீன், காய்கறிகள் போன்றவை, வர்த்தகர்களுக்கும் போக்குவரத்தில் ஈடுப்டடிருப்பவர்களுக்கும் நட்டம் ஏற்பட முடிந்தது.
திருகோணமலையில் உள்ள 7 நெல் கமக்காரப் பதிலிறுப்பாளர்களும் இலகுவாக தமது பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உள்ளீடுகளைக் கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது பற்றிக் கூறியுள்ளனர். அதேபோல, அம்பாறை மாவட்டத்தில் 6 நெல் கமக்கார பதலிறுப்பாளர்களில் 4 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 பதிலிறுப்பாளர்களில் 6 பேரும் சந்தைகளின் வாய்ப்புப் பெறுவது கடினமாக இருந்துள்ளதனைக் கூறியுள்ளனர். மீன்பிடியாளர்களில்,திருகோணமலையில் 8 பதிலிறுப்பாளர்களில் 7 பேரும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 9 பதிலிறுப்பாளர்களில் 6 பேரும் சந்தை வாய்ப்பு பெறுவது இலகுவானதாக காணப்படுவதில்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளனர். எப்படியாயினும், மட்டக்களப்பில் உள்ள எல்லா மீன்பிடிப் பதிலிறுப்பாளர்களும் (6) சந்தை வாய்ப்பு இலகுவாகப் பெற முடிந்தது என்பதைத் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள எல்லா வர்த்தகர்களும் (5 பதிலிறுப்பாளர்கள்) கொழும்புக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பொருட்கள் கொள்வனவு செய்வது குறித்து இலகுவான சந்தைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைக் கூறியுள்ளனர். மேலும் மட்டக்களப்பில் உள்ள 5 வர்த்தகப் பதிலிறுப்பாளர்களில் 4 பேரும் திருகோணமலையில் உள்ள 7 வர்த்தகப் பதிலிறுப்பாளர்களில் 4 பேரும் கொழும்பிலும் நாட்டின் மற்றைய பகுதிகளிலும் இலகுவான சந்தைவாய்ப்புகள் பெற முடியாமை பற்றி எடுத்துரைத்துள்ளனர்.
நன்கறிந்த மூலாதாரங்களிலிருந்து ஆவணி 2006 க்கு முன்னராக (A9 நெடுஞ்சாலை மூடப்பட்டதற்கு முன்பாக) தெரிய வந்தது என்னவென்றால், வவுனியாவுக்கும் திருகோணமலைக்குமிடையே 45-50 பேருந்து வண்டிகள் நாளாந்தம் பயணிகளையும் பொதிகளையும் ஏற்றிக்கொண்டு சேவையில் ஈடுபட்டிருந்தன. ஆனாலும், மோதல் தீவரமடைந்த கட்டத்தின் பின் நாளாந்தம் ஐந்துக்குக் குறைந்த அளவில் பேருந்து வண்டிகள் சேவையில் இருக்கின்றன. அத்தோடு லொறிகளும் பேரூந்து வண்டிகளும் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் பொருட்களையும் பயணிகளையும் ஏற்றிச் செல்லும் வேளைகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும் கொழும்புக்கும் மற்றைய சந்தைகளுக்கும் இலகுவான வாய்ப்பினைப் பெற முடியாத வர்த்தகர்களின் பங்களவு மிகக் குறைவாகவே திருகோணமலை மாவட்டத்தில் காணப்பட்டுள்ளது.
3.5 எதிர் நோக்கும் பிரச்சினைகள்
பதிலிறுப்பாளர்கள் தங்களுடைய வெவ்வேறு வாழ்வாதார தொழில்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் எவையென கேட்கப்பட்டனர். இக்கேள்வி முடிவில் திறந்த தன்மையுடையது (மற்றக் கேள்விகளைப்போல) மற்றும் பல் வகையான பதில்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் நெல்கமக்காரர்கள், தண்ணீர் கிடையாமை மற்றும் உள்ளீடுகள் மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றின் உயர்ந்த விலைகள் என்பவை தங்களுடைய தொழில்கள் தொடர்பான பிரதான பிரச்சினைகள் என இனங்கண்டுள்ளனர். அதாவது, மொத்தமாக 6 பதிலிறுப்பாளர்களில் 5 பேர் பயிர்ச்செய்கை தொடர்பாக தண்ணீர் இல்லாமை மிகக் கடுமையான கட்டுப்பாடாக இருந்ததனை வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் 4 பதிலிறுப்பாளர்கள் உள்ளீடுகளின் உயர்ந்த விலைகள், எரிபொருள் உள்ளடங்கலாக, முக்கிய இடையூறுகளாக இருந்ததை இனங் கண்டுகொண்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில், உள்ளீடுகளின் உயர்ந்த விலைகள், எரிபொருள் உட்பட பிரதான கட்டுப்படுத்தும் காரணியாக 8 பதிலிருப்பாளர்களினால் (மொத்தம் 9) இனங்கண்டுகொள்ளப்பட்டுள்ளது.இதற்கு மாறுபட்டதாக திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளினால் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகள் பல்வேறுபட்டவையாக காணப்பட்டுள்ளன. மொத்த பதிலிறுப்பாளர்கள் 7 இல் 4 பேர் பாதுகாப்பற்ற தன்மை மிக முக்கிய பிரச்சினையாகக் கூறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக மூலதனம் கிடைக்காதது (7 இல் 3 பேர்) இனங்கண்டு கொள்ளப்பட்டது. இவை எல்லாவற்றிலிருந்தும் அறியக் கூடியது உள்ளீடுகளின் உயர்ந்த விலைகள், எரிபொருள் உட்பட்டதாக, எல்லா மாவட்டங்களிலும் மிகப் பெரிய பிரச்சினையாக நெல் கமக்காரர்களினால் எதிர்நோக்கப்பட்டுள்ளதுது.
மீனவர் சமூகத்தில், அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 9 பதிலிறுப்பாளர்களில் 8 பேர் உள்ளீடுகளின் உயர்ந்த விலைகள், எரிபொருள் உள்ளடங்கலாக, எதிர்நோக்கப்பட்டுள்ள பிரதான பிரச்சினையாக எடுத்துக் கூறியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பதிலிறுப்பாளர்களில் 5 பேர் எரிபொருள் உள்ளடங்களான உள்ளீடுகளின் உயர்ந்த விலைகள் மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் காரணியாகக் காட்டியுள்ளனர். இதற்கு வேறாக நெடுந்தூர மீன்பிடித்தல் மீது விதிக்கபப்ட்ட தடை (8இல் 7பேர்) மற்றும் மீன்பிடித்தல் மீது விதிக்கப்பட்ட தடை என்பவை திருகோணமலையில் பிரதான கட்டுப்படுத்தல்களாக இனங்காணப்பட்டது. ஆகவே, திருகோணமலையில் பாதுகாப்புக் கட்டுப்படுத்தல்கள் பிரதான தடையாக இருந்ததுடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளீடுகளின் உயர்ந்த விலைகள், எரிபொருள் சேரலாக, பிரதான இடையூறாக இருந்துள்ளன. திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் படைத்தளம் இருப்பதனாலும் மற்றும் வர்த்தக மற்றும் பயணிகள் கப்பல்கள் இத்துறைமுகத்திற்கு வருவதனாலும் மீன்பிடித்தல் குறித்த கட்டுப்படுத்தல்கள், அம்பாறை அல்லது மட்டக்களப்பினை விட, திருகோணமலையில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. துறைமுகப் பாதுகாப்புக் காரணங்களைக் கருதி அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் 5 வர்த்தகப் பதிலிறுப்பாளர்களில் 4 பேர் பொருட்களின் உயர்ந்த விலைகள் தங்களுடைய வர்த்தகம் தொடர்பான முக்கிய முட்டுக்கட்டையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகள் பல்வேறு வகைப்பட்டவையாக இருந்துள்ளன. ஏழு பதிலிறுப்பாளர்களில் 3 பேர் பொருட்களின் உயர்ந்த விலைகள், வாடிக்கையாளர்களின் குறைவு, கொழும்புக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு வருவதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றை எடுத்துக் கூறியுள்ளனர். பொருட்களின் உயர்ந்த விலைகள் நுகர்வோர் கொள்வனவுச் சக்தியினை குறைத்து, வியாபாரத்தின் விற்பனைப் புரள்வினைப் பாதிக்க முடிந்தது என்பதும் எடுத்துக்கூறப்பட்டது.
எரிபொருள் உள்ளடங்கலான உள்ளீடுகளின் மற்றும் பொருட்களின் விலை உயர்வுகள் என்பவை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் குறித்து மூன்று மாவட்டங்களிலும் மிக முக்கியமான முட்டுக் கட்டையாக விளங்கியது என்பது தெரிகின்றது. மேலும், பாதுகாப்புக் காரணங்களினால், கட்டுப்படுத்தல்கள் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் பிரதான பிரச்சினையாக இனங்கண்டு கொள்ளப்பட்டுள்ளது. அதிகமான சோதனை நிலையங்கள் உள்ளடங்களான கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் நடைமுறையில் இருந்ததனால் பொருட்கள் குறித்த கொடுக்கல் வாங்கல் செலவு உயர்வடைந்து உள்ளீடுகளின் மற்றும் பொருட்களின் விலையேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு, உயர்ந்த விலைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மறைமுகமான விளைவாக ஏற்பட்டுள்ளது.
3.6 மாற்று வாழ்வாதாரத் தொழில்கள்
தங்களுடைய வாழ்வுத் தொழில்கள் தொடர்பாக பல தடைகள் ஏற்பட்டுள்ள பொழுதிலும் விவசாயிகள் , மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் எல்லா மாவட்டங்களிலும் தம்முடைய வாழ்தொழில் வாய்ப்புகளோடு ஒட்டிக் கொண்டுள்ளனர்.
வெளியீட்டில் அளவுரீதியாகவும் பெறுமதி ரீதியாகவும் வீழ்ச்சி கண்டுள்ள பொழுதிலும் வேறு வேலை வாய்ப்புகள் முழுவதாகவோ அல்லது துணைநிறைவு முயற்சிகளாகவோ பெற்றதாகத் தெரியவில்லை.
மூன்று மாவட்டங்களிலும் அநேகமாக எல்லா நெற் கமக்காரர்களும் அதே பயிர் செய்கையினைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். எவ்வாறாயினும் அம்பாறை மாவட்டத்தில் 6 பதிலிறுப்பாளர்களில் ஒருவர் தம்முடைய நிலத்தினைக் குத்தகைக்கு விடுவதற்கு எண்ணியுள்ளனர். இது ஒரு மாற்று வாழ்தொழில் நடவடிக்கையாகக் கருத முடிகின்றது.
மீன்பிடித் துறையிலும் எல்லாவிதமான கட்டுப்படுத்தல்களின் மற்றும் பிரச்சினைகளின் மத்தியிலும் மற்றும் வெளியீடுகளின் வீழ்ச்சியின் பின்னணியிலும் எல்லா மீனவர்களும் தங்களுடைய வாழ்தொழிலாக எல்லா மாவட்டங்களிலும் மீன்பிடித்தலில் தங்கியுள்ளனர்.
அப்படியிருப்பினும் திருகோணமலை மாவட்டத்தில் சில மீனவர்கள் (8 இல் 2 பேர் ) தங்களுடைய மீன்பிடி வருமானத்தை துணைநிறைவு செய்வதற்கு முச்சக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வருமானம் பெறுகின்றனர். எல்லா மாவட்டங்களிலும் வர்த்தகர்கள் பிரச்சினைகள் எழுந்துள்ள பொழுதிலும் தொடர்ந்தும் அதே வாழ்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
வாழ்தொழில்கள் குறித்து மாற்று வாய்ப்புகளுக்குச் செல்வது என்பது இப்பொழுது சிந்திக்கக் கூடிய விடயமல்ல. மோதல்கள் தொடங்கியிருந்த காலந்தொட்டு இன்று வரையுள்ள காலப்பகுதி வாழ்தொழில்களை மாற்றுவதற்கு போதுமளவு நீண்டதாக இருக்கவில்லை. வாழ்வாதாரம் குறித்து அரச நலக் கொடுப்பனவுகள் மீது தங்கியிருப்பதும் வெளிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால், இக்கணிப்பு உளவாரியாக இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நிலையங்களை உள்ளடக்கவில்லை. அங்கு மக்கள் பணமாகவும் பொருளாகவும் வழங்கப்படும் கொடுப்பனவுகள் மீது தங்கியிருக்கின்றனர்.
தொடரும்