Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
மின்சாரக் கட்டண அதிகரிப்பு விவகாரம்
[05 - March - 2008] [Font Size - A - A - A]
இலங்கை மின்சாரசபை தொடர்ந்து பாரிய நட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதனை ஈடு செய்வதற்கு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகின்றது. மின் கட்டண அதிகரிப்பின் மூலம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மீது இன்னொரு சுமையை சுமத்துவதற்கு அரசு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மின்சார சபை நட்டத்தில் இயங்குவதற்கான காரணம் கண்டறியப்பட்டு அதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அந்தப் பளுவை அப்பாவி பொதுமக்கள் மீது சுமத்தும் முயற்சியை எந்த விதத்திலும் அங்கீகரிக்க முடியாது.

மின்சார சபையின் தலைவர் உதய ஷ்ரீ காரியவசத்தின் கரங்களில் தற்போது பாரதூரமானதொரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. கடன் பளுவால் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மின்சார சபையின் வீண்விரயம், ஊழல் மோசடிகள் காரணமாக அந்த நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர் கொண்டுள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வரும் அரசுகள், மின்சார சபை உயரதிகாரிகளின் கண் மூடித்தனமான செயற்பாடுகளே இதற்கு முக்கிய காரணமென அந்த அறிக்கையில் தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்சார சபையின் தலைவர் நாட்டில் இல்லாத நிலைமையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

மின்சார சபையின் அதிகாரிகள் ஊழல் மோசடி, வீண்வீரயக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றனர். அரச சக்தியைக் கொண்டு தாங்கள் சுக போகம் அனுபவிக்கவில்லையெனவும் மின்சார சபை நிதியை கொள்ளையடிக்கவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். டீசலை கூடுதல் விலைக்கு கொள்வனவு செய்து குறைந்த விலைக்குச் சந்தைப்படுத்துவதன் காரணமாகவும் அரச நிறுவனங்களுக்கு நிவாரண அடிப்படையிலும் கடன் அடிப்படையிலும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலுமே இந்தளவு பெரும் நட்டத்தை சபை எதிர் கொள்ள நேரிட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். மின்சார சபையின் உள்ளக நிருவாகம் பற்றி தெளிவற்ற நிலையில் பொறுப்பற்ற முறையில் விளக்க மளிக்க முயற்சிப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அதிகாரிகள் அடித்துக் கூறுகிறார்கள். மேலோட்டமாக ஊழல் மோசடி பற்றிக் கூற முற்படுபவர்கள் எங்கு எவரால் ஊழல் மோசடி மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டுமென பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு அறிக்கைகள் ஒன்றுக்குப் பல முன்வைக்கப்பட்ட போதிலும் இது வரையில் ஒரு குற்றச்சாட்டு தொடர்பிலேனும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் மூலம் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்படுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது. செலவினங்களை கண்மூடித்தனமாக மேற்கொண்டு விட்டு அதனால், ஏற்படக் கூடிய நட்டத்தை ஈடு செய்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி சுமையை மக்களின் முதுகில் ஏற்றுவதைத் தான் அரசுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொண்டுள்ளன. இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக அன்றாட வாழ்க்கையை கடத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. விலை அதிகரிப்புக்கேற்ற வருமான அதிகரிப்பு ஒரு சதத்திலேனும் அதிகரித்ததாகத் தெரியவில்லை. இத்தகையதொரு சூழ் நிலையில், மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டால் இந்தப் பெரும் சுமையை மக்களால் சமாளிக்க முடியுமா எனக் கேட்க வேண்டியுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 20.8 வீதமாகக் காணப்பட்டது. அது ஒரு மாதத்தில் பெப்ரவரி மாதத்தில் 21.8 வீதமாகக் கூடியுள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள் அப்பாவி பொது மக்களேயாவர். வெளியே பகிரங்கமாகக் காணப்படாவிட்டாலும் நாடு இன்று மிக மோசமான வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீரான பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படாததன் விளைவே இது . இப்படியே இன்னும் எவ்வளவு காலத்துக்கு நாடு மோசமான நிலைக்குக் கொண்டு செல்லப்படப் போகிறது என்ற கேள்வி ஒவ்வொருவரது வாயிலிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படியானதொரு நிலைமையில் மின்சாரத் தாக்குதலையும் நடத்தி மக்களை பலவீனப்படுத்தும் முயற்சியை அரசு ஆழமாக பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டுமொரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com