ஈராக்கில் சுமார் இரண்டு இலட்சம் குர்து இன மக்களைக் கொன்று குவித்த கெமிக்கல் அலிக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் ஹசன் அல்-மஜித். 1980 இல் குர்து இன மக்களுக்கு எதிராக நச்சுவாயு தாக்குதல் நடத்தியதால் இவருக்கு கெமிக்கல் அலி என்று பெயர் வந்தது.
இதைத் தொடர்ந்து 1998 இல் இராணுவத்தின் உதவியுடன் சுமார் ஒரு இலட்சத்து 82 ஆயிரம் குர்து இன மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தார் கெமிக்கல் அலி.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2007 ஜூனில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் சில சட்ட சிக்கல்கள் எழுந்தன.
இந்நிலையில் கெமிக்கல் அலிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஈராக் அதிபர் ஜலால் தலபானி தலைமையிலான மூவர் குழு இருநாட்களுக்கு முன் முறைப்படி அனுமதி அளித்தது.
இதையடுத்து, அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், எந்த திகதியில் தூக்கிலிடப்படுவார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதே வழக்கில் சதாம் இராணுவத்தின் முன்னாள் தளபதி ஹூசைன் ரஷீத், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுல்தான் ஹாசம் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.