செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லையென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் செவ்வாயில் திரவநிலையில் ஆறுபோல நீர் ஓடிக்கொண்டிருக்கிறது எனக் கூறப்பட்டது தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.
செவ்வாய்க் கோளைச் சுற்றிவந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக நாசா ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் மிகத் துல்லியமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இதை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி ஜோன் டி.பெலேசியர் தலைமையிலான குழு, செவ்வாயில் திரவநிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தனர்.
செவ்வாயில் நீரோட்டம் இருக்கிறது என்ற முடிவுடன் கூடிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்த விஞ்ஞானி கென்னெத் எட்ஜெட் தற்போதைய ஆய்வு குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சி சூடான விவாதத்துக்குரியது. செவ்வாயின் துருவப்பகுதியில் உறைந்த நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் ஏற்கனவே கொடுத்திருக்கிறார்கள். இதனால், செவ்வாயில் ஆறு போன்ற நீரோட்டங்கள் இருக்கக்கூடும் என அவர்கள் கூறினர்.
செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா, ஏதேனும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றனவா என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நீர் பற்றிய ஆராய்ச்சியே விடை தரும்.