* முன்னணியின் உபதலைவர் தெரிவிப்பு
நுவரெலியா மாவட்ட வாக்காளர் பட்டியல் தமிழ் மொழியில் வெளியிடப்படாமைக் குறித்து இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி மனித உரிமை இல்ல அனுசரணையுடன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டமையானது வரவேற்கத்தக்க விடயமாகுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
"ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வாக்காளர் இடாப்புகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு மீளாய்வு செய்யப்படுகின்ற காலங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர் விபரப்பட்டியல்கள் தமிழ் மொழியில் வெளியிடப்படுவதில்லை. இதனால், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தமையை இ.தொ.ஐ. முன்னணி தேர்தல் ஆணையாளருக்கு பல முறை சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும், இவ்விடயம் குறித்து தேர்தல் திணைக்களம் உரிய கவனம் செலுத்த வில்லை.
இந்த நிலையில். நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தால் வெளியிடப்பட்ட 2007 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தீர்மானித்தது.
இதற்கேற்ப கொழும்பு மனித உரிமைகள் இல்லத்தின் அனுசரணையுடன் மேன்முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தோம்.
இந்த மனுவை கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வாக்காளர் இடாப்பினை தமிழ் மொழியில் வெளியிடாமை தொடர்பான விடயம் குறித்து பதில் மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட பிரதேச வாக்காளர் இடாப்பில் பெயர் பதிய முடியாமலுள்ள தமிழர்களுக்கு இதுவொரு வாய்ப்பைத் தந்துள்ளது.
மேலும் எனது ஆர்வத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற மனித உரிமை இல்லத்துக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.