* அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவிப்பு
ரொஷான் நாகலிங்கம்
பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக சகல உரிமைகளுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பது நாட்டின் தற்போதைய தேவையாகுமென தெரிவிக்கும் நிர்மாண மற்றும் பொறியியல் சேவை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண, இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு தனது பூரண ஆதரவை வழங்குமெனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு கிருலப்பனையிலுள்ள அதன் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நாட்டின் தற்போதைய தேவையாகும். இதற்கு எமது கட்சி தனது முழு ஆதரவை வழங்கும்.
இதற்காக 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை எமக்கு திருப்தியளிக்கின்றது. எனினும், இந்த விடயத்தில் யதார்த்தத்துக்கு ஏற்ற வகையில் அவர் செயற்பட வேண்டும்.
இந்த விடயத்தில் அவரது கட்சிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியபோது, அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சஜித் பிரேமதாசா ஆகியோர் கலந்துகொள்ளாமல் சொக்ஷி, ருக்மன் சேனநாயக்க ஆகியோரே கலந்துகொண்டனர். ஏனெனில் அவர்கள் அவருக்கு ஆமாம் போடுபவர்கள். இதன்மூலம் நாம் இதனை விளங்கிக்கொள்ள முடியும்.
17 ஆவது யாப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொள்வதிலும் பார்க்க அதனை நடைமுறைப்படுத்துவதற்கான, அனுமதிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வலுவிழந்துள்ளது. அகங்கல பிரதேசத்தில் அக்கட்சியின் மகாநாடு நடைபெற்றபோது அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதனை உறுதி செய்கின்றது.
அதாவது ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களே அதில் கலந்துகொண்டனர். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை அக்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க தயாராகிவருவது புலனாகின்றது என்றார்.