* ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க
"தினமும் எமக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், இனி ஒரு போதும் நாம் ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டோம். ஆயுதங்களை நாடிச் செல்லவும் மாட்டோம்" என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
காலி சமனல பாலமருகே இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
ஆயுதங்களில் எமக்கு நம்பிக்கை கிடையாது. ஆயுதங்களால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது.
வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்த்து போராடிய கடந்த கால அனுபவங்கள் எமக்கு நிறையவேயுள்ளது.
இந்த நாட்டுக்கு வெளிநாடுகளின் இராணுவத் தலையீடுகள் தப்பித் தவறி ஏற்பட்டால் உயிரைப் பணயம் வைத்தேனும் அதனை முறியடிக்க நாம் தயங்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரின்வின்சில்வா தனது உரையில் கூறியதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிற்போக்குவாதிகளை அரவணைத்துக் கொண்டு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சகோதரர் பாதுகாப்புச் செயலாளராக அரசியலமைப்புச் சட்டத்தில் உட்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்ட கூற்று கேலிக்குரியது. அறியாத்தனமாகவோ இருக்கலாம்.
அவ்வாறு செய்வதால் அதனை ஜே.வி.பி.யினரான நாங்கள் மாத்திரமல்ல, முப்படையினரும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதை கூறி வைக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தனது உரையில் கூறியதாவது;
முப்படையினரும் இணைந்து கிழக்கை மீட்டெடுத்துள்ளனர்.
அந்த வெற்றியின் இரகசியத்தைக் காட்டிக் கொடுக்கவும் இப்போது இரகசிய சதிகள் நடைபெறுவதாகத் தெரியவருகிறது.
எமது படைவீரர்கள் யுத்தத்தினால் பிரிவினை வாதத்தை முறியடிக்கும் போது சமாதானம் என்ற பெயரில் பொய் வேசதாரிகள் இந்த நாட்டை பிரிக்க முயல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.