அப்புத்தளை ஹல்தும்முல்லை பகுதியில் இ.போ.ச. பஸ்- லொறி நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்தும்முல்லை பத்கொட ஹோட்டல் சந்தியில் கொழும்பிலிருந்து அப்புத்தளை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸுடன் எதிரே வந்த லொறியொன்று மோதியுள்ளது.
பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்களுடன் 34 பேர் படுகாயமடைந்ததாகவும் இவர்களில் இரண்டு வாகனங்களது சாரதிகளும் உள்ளடங்குவதாகவும் அப்புத்தளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 24 பேர் ஹல்தும்முல்லை வைத்தியசாலையிலும் 10 பேர் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வாகனச் சாரதிகளினதும் நிலைமை கவலைக்கிடமானதாகக் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
மேற்படி வாகன விபத்து தொடர்பான விசாரணைகள் அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசித்த ரட்நாயக்கவின் வழிகாட்டலில் போக்குவரத்து பொலிஸ் தலைமை அதிகாரி ஜயதிஸ்ஸவினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.