தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது படையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை வன்னியிலிருந்தும் வவுனியாவிலிருந்தும் கொழும்பு நோக்கி வந்தபோது மதவாச்சி சோதனை நிலையத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மீது அச்சுறுத்தும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் படையினர் நடந்துகொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் என்பவற்றைப் பயன்படுத்தி இவர்களது வாகனங்கள் உட்பட இவர்களின் உடைமைகள் அனைத்தும் துருவித் துருவி சோதனையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்ததால் அவரைக் கொழும்பு செல்ல அனுமதிக்க முடியாதென படையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஸோர் பொலிஸ் திணைக்களத்தில் முறையிட்டதையடுத்தே கஜேந்திரன் கொழும்பு வர அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இனிவரும் காலத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு இல்லாமல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியாதெனவும் கஜேந்திரன் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.