ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் மற்றும் புத்தளம் நகரசபை உறுப்பினர் முஹ்ஸி ஆகியோருக்குச் சொந்தமான வாகனம் மற்றும் வீடு என்பன கும்பலொன்றினால் அதிகாலைவேளை சேதமாக்கப்பட்டுள்ளது.
புத்தளம்- கொழும்பு வீதி பாலாவியில் அமைந்துள்ள மாகாண சபை உறுப்பினர் நியாஸின் வீட்டுத் தோட்டப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அதிகாலை 2.30 மணியளவில் கும்பலொன்றினால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வடமேல் மாகாண சபைக் கூட்டத்திற்குச் செல்வதற்காக மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தமது வாகனத்தை எடுப்பதற்கு வந்த போது தமது வாகனம் சேதப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டதையடுத்து இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வாகனமொன்றில் வந்தவர்கள் இத்தாக்குதல்களை நடத்தியதன் பின்னர் புத்தளம் சவீவபுரம் நிவ்செட்டில்மென்ட் வீதியில் அமைந்துள்ள புத்தளம் நகரசபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸியின் வீட்டு ஜன்னல்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமக்கு தொடராக கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தமது சகோதரர் உட்பட ஆதரவாளர்கள் பல சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எதுவித பயனுமில்லை.
மாகாண சபை உறுப்பினரான தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி வடமேல் மாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரிடம் ஏற்கனவே கையளித்ததாகவும் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.