சிவராத்திரி தினமன்று மதுவிற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் மேலக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் வேண்டுகோள் எடுத்துள்ளார். இந்துக்களைப் பொறுத்தவரை சிவராத்தி ஒரு புனிததினம். தீபாவளி, பொங்கல்,வருடப்பிறப்பு என்பன களிப்போடு கொண்டாடப்படும் நாட்களாகும்.
பலமாதங்களுக்கென்று பல்வேறு நாட்கள் மதுவிற்பனை அற்ற தினங்களாக கலால் திணைக்களம் அறிவிக்கும் போது ஏன் ஒரே புனித வழிபாட்டுக்குரிய சிவராத்திரியை மதுவிற்பனை அற்ற நாளாக பிரகடனப்படுத்த முடியாதென்று கலாநிதி குமரகுருபரன் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது கேட்டுள்ளார்.
ஸ்தாபன ரீதியாக நிதி அமைச்சரைக் கோருமிடத்து நிதியமைச்சு மதுவரி கலால் திணைக்களத்திற்கு இது குறித்து அறிவுறுத்தல் விடுக்குமென தெரிவித்துள்ளார்.
எனவே மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்து மாமன்றம், இந்துப் பேரவை, நல்லை ஆதீனம் போன்ற தேசிய அமைப்புக்கள் கூட்டாகவோ, தனியாகவோ நிதியமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும் போது அடுத்த ஆண்டிலாவது இதை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.