* `மே மாதம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்'
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதியும் நியாயமுமாக நடைபெறுமென பவ்ரல் அமைப்பிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் மே மாதம் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை பவ்ரல் அமைப்பின் முக்கியஸ்தர்களான கிங்ஸ்லி ரொட்றிக்கோ, கலாநிதி ஜெஹான் பெரேரா உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியைச் சந்தித்து மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது;
மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதன் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்புக்கிட்டும்.
ஜனநாயகம் நிலைபெற இது உதவும் . மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மே மாதம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பவ்ரல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நீதியாக நடைபெற வேண்டுமென்பதே தமது எதிர்பார்ப்பென ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இக்கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 13 மற்றும் 17 ஆவது திருத்தங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.