தம்புள்ள நகர பஸ் நிலையத்திற்கருகில் அண்மையில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிங்களப் பெண்ணான பீ.டீ.ஹேமலதா (வயது 52) தம்புள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் நிமால் ரணவீர சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபரின் வைத்திய அறிக்கையை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட நீதிவான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவருக்குத் தேவையான வைத்திய வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறும் பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கினார்.
கடந்த 2 ஆம் திகதி தம்புள்ளவில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது 21 பேர் கொல்லப்பட்டும் 70 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்து தம்புள்ள ஆதாரவைத்தியசாலையில் சந்தேக நபர் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிக்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் - ருவான்வெலிசாய பௌத்த விகாரையில் கடந்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற தாமரை மலர் பூஜையில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களுடன் சந்தேக நபரான பெண்ணும் அவருடைய தாயாரும் மலர்கள் வைக்கப்படும் பெட்டியினுள் குண்டை மறைத்தவாறு எடுத்துச் சென்றிருப்பதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகத் தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான ஹேமலதாவும் அவரது தாயாரும் கண்டிப் பிரதேசத்தைச் சேர் ந்த கெங்கல்வையைச் சேர் ந்தவர்களென தெரியவருகிறது.
குறித்த தம்புள்ள பஸ் குண்டுவெடிப்பு சம்பந்தமான விசாரணைகளை இரண்டு பொலிஸ் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.