விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு உரிய பாதுகாப்புக் குறித்தும் ஆராய்வதற்கு நடத்தப்பட்ட மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போது அதில் கலந்து கொண்ட மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதில் உரையாற்றும்போது இந்த பொலிஸ் அதிகாரி உறங்கிவிட்டார்.
எனினும் , அந்தப் பொலிஸ் அதிகாரியை நித்திரையால் எழுப்பி கூட்டத்தை அவதானிக்கும்படி அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்.
அதன் பின்பு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், அதன் பின்னரும் அந்தப் பொலிஸ் அதிகாரி அமைச்சரின் உரைக்கு செவிமடுக்காமல் மீண்டும் உறங்கியுள்ளார்.
இவரின் இந்த நடவடிக்கை குறித்து கூட்டத்தில் உள்ள அமைச்சர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கும் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் அமைச்சர் அழகப்பெரும கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் வேறு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் மா அதிபரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.