* தற்போதைய நிலைவர மாற்றத்திற்கு கலாநிதி குமார் ரூபசிங்கவின் அறிவுரை
நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களில் பெரும்பான்மையானோர் சமாதானத்திலேயே தீவிர விருப்புக்கொண்டவர்களெனவும் அவர்களில் துணிந்து குரல் கொடுக்கக்கூடியவர்களில் குறைந்தது 100 பேராவது சமாதானத்தின் தேவையை வெளிப்படையாக முன்வைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமெனக் கலாநிதி குமார் ரூபசிங்க நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்தார்.
2003-2007 வரையில் பத்திரிகைகளில் வெளியான குமார் ரூபசிங்கவின் கட்டுரைகளின் தொகுப்பு நூலான `சமாதானத்திற்கான ஒரு குரல்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வு பெற்ற ஆயர் கலாநிதி ஜெபநேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நூலாசிரியர் கலாநிதி ரூபசிங்க உரையாற்றுகையில்;
"சமாதானத்தில் ஆர்வம் உள்ளவர்கள் துணிந்து குரல் கொடுக்க முன் வரவில்லையென்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். சமூகத்தில் கற்றறிந்த பிரஜைகளில் குறைந்தது 100 பேரென்ற வீதத்திலாவது வெளிப்படையாக குரல் கொடுக்க முன்வந்தால் சமாதானம் தொடர்பான மாற்றத்தையும் அது அவசியம் தேவை என்ற உணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட முடியுமென்ற கருத்தை கலாநிதி ரூபசிங்க உறுதியாக வலியுறுத்தினார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
"எமது சமூகத்தவரிடையே காணப்படும் இனவேறுபாடுகளினை மக்கள் பிரித்துப் பார்ப்பதை நான் ஒரு சிறு அனுபவம் மூலம் எனது சிறுவயதில் அறியக் கூடியதாக இருந்தது.
எனது சிறுபராயத்தில் ஒரு நாள் நான் சைக்கிளில் வீதியில் சென்று கொண்டிருந்த போது அனைத்து வாகனங்களினதும் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டது.
என்ன காரணத்திற்காக இவ்வாறு வாகனப் போக்குவரத்து தடுக்கப்படுகின்றதென வினவிய போது, வீடொன்று எரிந்து கொண்டிருப்பதாக அறிந்து கொண்டேன்.
எரியும் அந்த வீட்டருகே சென்று அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
எனது ஒரு தமிழ் நண்பனும் அவரது பெற்றோரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்ததை அறியக் கூடியதாக இருந்தது.
இச்சம்பவம் பற்றி நான் எனது தாயாரிடம் சென்று அவர்களின் தற்கொலைக்குரிய காரணம் பற்றி அறிய முற்பட்ட போது, அது உனககுத் தேவையில்லாத விடயம் எனக் கூறி மறுத்து விட்டார்.
இதேபோலத்தான் அழகிய எமது நாடு இன்று எரிந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுயலாபம் தேடும் தரப்புகளும் நாட்டை பிளவு படுத்திப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏன் இவ்வாறு எமது நாடு பிளவு பட வேண்டும்? என்பது தான் இச்சந்தர்ப்பத்தில் எழும் கேள்வியாகவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நான் ஒரு இளைஞரை வீதியில் சந்தித்து உரையாடிய போது அவரின் கருத்துகள் மூலம் அங்குள்ளவர்களின் உள்ளுணர்வுகளை அறியக் கூடியதாய் இருந்தது.
அத்துடன், அவர்கள் அரசின் மீது மிகுந்த ஆத்திரம் உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
இரண்டாம் தர பிரஜாவுரிமை உடையவர்களாக நாம் அவர்களைக் கருதமுடியாதென நான் தெரிவித்தேன்.
நாட்டின் பிரச்சினைகளை சகல இன மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடனேயே நான் இவ்வாறான கட்டுரைகளை எழுதி மும்மொழிகளிலும் பிரசுரித்தேன்.
அக்கட்டுரைகளைத் தொகுத்து இன்று நூலாக வெளியிட்டுள்ளேன். அக்கட்டுரைகளில் எடுத்துக் கூறப்பட்டிருப்பதாவது;
எமது நாட்டை இறுகப் பற்றியுள்ள போரும் அதன் தாக்கங்களும் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டில் பாதுகாப்பு உள்ளதென்பதை என்னால் நம்பமுடியாமல் உள்ளது. அதனைத்தான் நாம் தீர்மானிக்க வேண்டும். இலங்கையில் சகலரும் பாதுகாப்பாக வாழும் ஒரு சூழ்நிலை உள்ளதா?
தற்போது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கு இரு வேறு இனத்தைச் சேர்ந்த ஹிலாரியும் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர்.
இது போன்றதொரு நிலை இலங்கையைப் பொறுத்தவரையில் எந்தளவிற்கு பொருத்தமென நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதேபோல் இந்தியாவின் மொத்த சனத்தொகையில் இரண்டு வீதமிருக்கும் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
சர்வதேச அளவில் இவ்வாறான நடைமுறைகள் காணப்படும் போது இலங்கைக்கு மட்டும் ஏன் இது பொருந்தாததொன்று?
இலங்கையில் தற்போது 60 சத வீதமான சிங்களவர்களும் 70 வீதமான முஸ்லிம்களும் 80 வீதமான தமிழர்களும் சமாதானத்தை விரும்புகின்றனர்.
எந்தவொரு அரசியல் திட்டமும் எந்த ஒரு பிரஜைகளையும் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு அது பாதிக்குமாக இருந்தால் அது பயனற்றதாகவே இருக்கும்.
இந்த நடைமுறைகளை மக்கள் மாற்றி அமைப்பதன் மூலமே நாம் சுமுகமானதொரு வாழ்வை இங்கு வாழ முடியும்.
ஆசியாவிலேயே அழகானதும் சிறப்புகள் பொருந்திய நாடாகவும் இலங்கை உள்ளதென்றும் அதனை ஏனைய ஆசிய நாடுகளும் பின்பற்ற வேண்டுமெனவும் 1953 இல் இலங்கைக்கு வந்திருந்த போது கூறிய சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அதற்கு முப்பது வருடங்கள் பின்னர் இங்கு வந்த போது எந்தவொரு நாடும் இலங்கையைப் பின்பற்றக் கூடாதெனத் தெரிவித்தார்.
என்ன பிழை இங்கு இழைக்கப்பட்டிருக்கின்றதென்பதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். சிங்களத் தலைவர்களுக்கு நாட்டில் என்ன தவறு நடந்து கொண்டிருக்கின்றதென்பது நன்றாகத் தெரியும்.
சத்தியாக்கிரகத்தின் மூலம் இரு துருவங்களை இணைக்க முடியும் என்பது யாமறிந்த உண்மை.
காந்தீயத்தையும் சத்தியாக்கிரகத்தையும் பின்பற்றிய பல தலைவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
எமது நாடு எதிர் கொண்ட இனப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் 1988, 1989 காலப்பகுதிகளில் ஜே.வி.பி.யால் தெற்கில் நடத்தப்பட்டதில் இரு மாதங்களில் மட்டும் எண்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தகால போரியல் வரலாற்றில் இதுவரை யாரும் வெற்றிகண்டதுமில்லை. ஆயுதம் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் முடியாது.
அதைவிட மறைமுகமான போராட்டங்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள் மிகவும் கூடிய அளவில் இங்கு நடைபெறுகின்றன.
ஆனால் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தனது பதவிக்காலத்துள், போரின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் 2010 வரை நீடிக்கும்படியானதொரு திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார்.
எவ்வளவு காலம் எடுத்தாலும் போர் மூலமான தீர்வினை முன்வைக்க முடியாது.
இலங்கை பிரிவதற்கும் இலங்கை அரசியல் வாதிகள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.
எமது நாட்டில் இரு பிரதான மொழிகள் உண்டு. அநேகமான தமிழர்களை கொண்டிருக்கும் பிரதேசம் நுவரெலியா. ஆனால் அங்குள்ள வைத்தியசாலையில் பணிபுரியும் 350 ஊழியர்களில் ஒருவருக்கு மட்டுமே தமிழ்மொழி தெரியுமென்பது ஆய்வொன்றின்மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வரும் சிங்களம் தெரியாத தமிழ் நோயாளி ஒருவர் தமது பிரச்சினையை மருத்துவருக்கோ அல்லது ஏனைய ஊழியர்களுக்கோ எப்படி கூறுவது.
அதேபோல இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தை எடுத்துக் கொண்டால் 7000 பொலிஸ் ஊழியர்களில் 700 தமிழ் தெரிந்தவர்கள் உள்ளனர்.
கொழும்பில் மாத்திரம் நான்காயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதேநேரம், ஐம்பது தமிழ் உத்தியோகத்தர்கள் மாத்திரம் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு தமிழன் தனது சுயமொழியில் எவ்வாறு ஒரு முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும். இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை யாராவது விரும்புவார்களா என்றால் எவரும் ஆம் என்ற பதிலை கூறமுடியாது.
ஆனால் எமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை எம் அனைவருக்கும் உண்டு. நிச்சயமாக வன்முறைகள் இல்லாத ஒரு தீர்வை எட்டுவதற்கு இங்குள்ள ஒவ்வொருவரும் நினைத்தால் பெறமுடியுமெனத்" தெரிவித்தார்.