மன்னார் பெரியமடுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரியமடுப் பகுதியிலிருந்து தட்சணாமருதமடு பகுதியிலுள்ள தங்கள் வீட்டுக்குப் பொருட்களை ஏற்றி வருவதற்காக உழவு இயந்திரமொன்றில் சென்றவர்களே இந்தக் கிளேமோர்த் தாக்குதலுக்கிலக்கானார்கள்.
மடுவிற்கு மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தூரத்தில் பெரியமடு பாலம் பிட்டிவீதியில் மைலடிவில்லு என்னுமிடத்திலேயே நேற்றுக் காலை 9 மணியளவில் இந்தக் கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் உழவு இயந்திரத்தில் சென்ற நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர். உழவு இயந்திரமும் பலத்த சேதமடைந்தது.
மரமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோரே வெடிக்க வைக்கப்பட்டதில் இந்த நால்வரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். அனைவரது உடல் முழுவதிலும் படுகாயங்களேற்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களில் வன்னியில் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.